ஆன்மிகம்
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2020-12-26 06:15 GMT   |   Update On 2020-12-26 06:15 GMT
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சமூக இடைவெளி கடைப்பிடித்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஏசுபிரான் அவதரித்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக டிசம்பர் 25 அன்று உலகம் எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு முதலே கிறிஸ்தவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். நள்ளிரவு பிரார்த்தனை, ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதவழிபாடுகளுக்கு பல்வேறு தடுப்பு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைந்த அளவில் வழிபாட்டில் பங்கேற்க வேண்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் கையாளப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் எளிமையாகவே கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த தேவாலயங்களில் நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனை கூட்டத்துக்கு குறைவான அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

குறைவான அளவில் மக்கள் கூடும் சில தேவாலயங்களில் மட்டுமே நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து தேவாலயங்களிலும் முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியே பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அமரும் நாற்காலிகளும் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தன. இதுதவிர வழிபாட்டுக்கு அனுமதி தரப்பட்ட தேவாலயங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

சென்னையில் சாந்தோம் தேவாலயத்தில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேலும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனை வழக்கத்தைவிட சுருக்கமாகவே நடந்தது.

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. தாமஸ்மவுண்ட் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. எழும்பூர் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.

நுங்கம்பாக்கம் சி.எஸ்.ஐ. கதீட்ரல் தேவாலயத்தில் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதுபோல தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

பல தேவாலயங்களில் பக்தர்கள் குறைவான எண்ணிக்கையில் கலந்துகொள்வதற்காக முன்கூட்டியே டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டன. தேவாலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப சோதனை நடத்திய பிறகே தேவாலயங்களில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்களுக்காக தேவைப்பட்ட நேரங்களிலும் பிரார்த்தனை கூட்டங்கள் சுருக்கமாக முன்னெடுக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பவர்கள் தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பும்போது ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து சொல்வதும், கட்டி தழுவுவதும் வாடிக்கை. ஆனால் நேற்றைய தினம் வழிபாடு முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் மட்டும் கூறி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பிரார்த்தனை கூட்டம் எளிமையாக நடந்தாலும் அதில் கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர். மொத்தத்தில் எளிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
Tags:    

Similar News