செய்திகள்
கொரோனா வைரஸ்

8, 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்

Published On 2020-09-12 09:56 GMT   |   Update On 2020-09-12 09:56 GMT
8, 10-ம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரி ராமன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டுக்கான செப்டம்பர், அக்டோபர் மாத தேர்வு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையில், வருகிற 21-ந் தேதி தொடங்கும் தேர்வுகளை எழுதும் மாற்றுத்திறனாளி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. எனவே நடைபெற உள்ள 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு, பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகள், தொடக்க கல்வி பட்டயத் தேர்வுகளை எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களில் சொல்வதை எழுதுபவர் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னர் அவர்களது விருப்பத்தின் பேரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பரிசோதனையை மேற்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை 7598512933 என்ற செல்போன் எண்ணுக்கு 15-ந் தேதிக்குள் தொடர்பு கொண்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சொல்வதை எழுதுபவர் சலுகை கோரும் மாற்றுத்திறனாளிகள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றை தேர்வு மையத்துக்கு வருகைபுரியும்போது உடன் எடுத்து வரவேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News