செய்திகள்
திருப்பூரில் டீக்கடையில் ஒரு மூதாட்டிக்கு ராகுல்காந்தி பிஸ்கெட் வழங்கிய காட்சி.

டீக்கடையில் மூதாட்டியிடம் கனிவுடன் பேசிய ராகுல்காந்தி

Published On 2021-01-24 03:42 GMT   |   Update On 2021-01-24 03:42 GMT
திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, சாலையோரம் இருந்த ஒரு டீக்கடைக்கு சென்று டீக்குடித்தார். அப்போது அங்கிருந்த மூதாட்டியிடம் உடல்நலம் குறித்து கனிவுடன் விசாரித்தார்.
திருப்பூர்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. திருப்பூரில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவினாசி புதிய பஸ் நிலையம் முன்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் அங்கிருந்து திருப்பூருக்கு காரில் புறப்பட்டார். வழியில் சாலையோரம் மக்கள் நின்று கையசைத்தனர். மக்கள் கூட்டத்தை பார்த்ததும் காரின் மேல்பகுதியில் அமர்ந்து இருந்தபடி கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது சாலையோரம் இருந்த டீக்கடைக்கு அருகே ராகுல்காந்தி காரை நிறுத்த சொன்னார். காரில் இருந்து இறங்கிய அவர் டீக்கடைக்குள் சென்று இருக்கையில் அமர்ந்தார். அவரை பார்த்ததும் டீக்கடைக்காரர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ராகுல்காந்தியுடன் தமிழக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். வட்ட வடிவில் நிர்வாகிகளுடன் அமர்ந்து ராகுல்காந்தி டீ குடித்தார். நிர்வாகிகளுடன் பேசியபடி மிகவும் எளிமையாக அவர் டீ அருந்தியபடி பேசிக்கொண்டு இருந்தார்.

பின்னர் பிஸ்கெட்டை அவர் ருசித்து சாப்பிட்டார். அருகில் அமர்ந்து இருந்த கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் பிஸ்கெட்டை கொடுத்தார். அப்போது டீக்கடையில் ஒரு ஓரமாக ஒரு பெஞ்சில் மூதாட்டி ஒருவர் இருந்து டீக்குடித்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் அந்த மூதாட்டியை ராகுல்காந்தி தனக்கு அருகே அழைத்தார். அந்த மூதாட்டியும் தயங்கிபடி அருகே சென்றார்.

பின்னர் தனது இருக்கைக்கு அருகிலேயே அந்த மூதாட்டியை அமர வைத்து பாசத்தோடு அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்தார். விவசாய கூலி வேலை செய்வதாக அந்த மூதாட்டி கூறியதுடன், தனது காலில் அறுவை சிகிச்சை செய்ததால் மிகவும் சிரமத்துடன் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துவதாகவும் கூறினார். மூதாட்டி கூறியதை விஜயதரணி எம்.எல்.ஏ. கேட்டு ராகுல்காந்தியிடம் மொழிபெயர்த்து கூறினார். அதன்பிறகு அந்த மூதாட்டிக்கு ராகுல்காந்தி பிஸ்கெட் கொடுத்து சாப்பிட வைத்து தைரியமாக இருக்கும்படி ஊக்கப்படுத்தினார். 15 நிமிடத்துக்கும் மேலாக ராகுல்காந்தி அந்த டீக்கடையில் அமர்ந்து இருந்தார்.

டீக்குடித்த ராகுல்காந்தி உடனடியாக குளிர்பான பாட்டில் வாங்கி குளிர்பானத்தையும் கொஞ்சம் அருந்தினார். ராகுல்காந்தி டீக்கடையில் டீ அருந்தியதை பார்த்ததும் டீக்கடைக்கு முன்பு ஏராளமானவர்கள் குவிந்தனர். ராகுல்ஜி...ராகுல்ஜி... என்று உற்சாகமாக கோஷமிட்டபடி இருந்தனர். டீ குடித்து முடிந்ததும் டீக்கடை ஊழியர்களுடன் ராகுல்காந்தி செல்பி எடுத்துக்கொண்டார். அதன்பிறகு டீக்கடைக்கு முன்பு நின்றிருந்தவர்களிடம் சென்று கைகுலுக்கினார். பின்னர் அங்கிருந்து திருப்பூருக்கு புறப்பட்டு வந்தார்.
Tags:    

Similar News