ஆன்மிகம்
தேங்காய் தண்ணீர் பிரசாத கருவியை மத்திய மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் இயக்கிவைத்தபோது எடுத்த படம்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் தண்ணீர் பிரசாதம் வழங்கும் எந்திரம்

Published On 2021-09-28 02:44 GMT   |   Update On 2021-09-28 02:44 GMT
இந்தியாவிலேயே முதல்முறையாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீரை பிரசாதமாக வழங்கும் எந்திரத்தை மத்திய மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் இயக்கி வைத்தார்.
தஞ்சாவூர் :

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரும். இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபட்டு வருகின்றனர்.

தேங்காய் தண்ணீரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வகையிலும் நவீன எந்திரத்தை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தினர் வடிவமைத்தனர்.

ரூ.7 லட்சம் மதிப்பில் தாங்கள் வடிவமைத்த எந்திரத்தை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நிறுவினர். இந்த கருவியை மத்திய மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று இயக்கி வைத்தார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அனந்தராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் தேங்காய்கள் உடைக்கப்படுகிறது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை பக்தர்களுக்கு சுத்திகரித்து பிரசாதமாக வழங்க முடிவு செய்தோம். அதன்படி ரூ.7 லட்சம் செலவில் இந்த நவீன கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News