ஆன்மிகம்
சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

Published On 2020-08-26 06:53 GMT   |   Update On 2020-08-26 06:53 GMT
மகாபாரத போரில் சல்லியனுக்கு எதிராக போரிட்ட தருமன், தன்னுடைய முகத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டு கோபத்தை வெளிக்காட்டவில்லை. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
மகாபாரதத்தில் அர்ச்சுனன், கர்ணன், பீமன் உள்ளிட்ட மாவீரர்களைப் போல, எவராலும் வெல்ல முடியாத ஒரு வீரனும் இருந்தான். வில்வீச்சு, வால் வீச்சு, வேல் வீச்சு போன்றவற்றில் சிறந்தவனாக இருந்த அந்த வீரனுக்கு, அவன் பெற்றிருந்த வரமும் இணைந்து அப்படியொரு பெருமையைப் பெற்றுத்தந்தது. அவன்தான் சல்லியன். மத்ர தேசத்தின் அரசன்.

பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி குந்தி. இவளுடைய பிள்ளைகள்தான், தருமன், பீமன், அர்ச்சுனன். மற்றொருத்தி மாத்ரி. இவளுடைய பிள்ளைகள் நகுலனும், சகாதேவனும். மாத்ரியின் உடன்பிறந்த சகோதரன்தான், சல்லியன். நகுல-சகாதேவர்களின் தாய்மாமன். பாண்டவர்களுக்கு இவ்வளவு நெருங்கிய சொந்தமான சல்லியன், மகாபாரதப்போரில் கவுரவர்களின் பக்கம் நின்று போர் புரிந்தான். அதற்கு துரியோ தனனின் சூழ்ச்சியே காரணமாக அமைந்தது.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் என்று முடிவாகிவிட்டது. அந்தப் பேரில் தன்னுடைய மருமகன்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தான், சல்லியன். வழியில் ஒரு பாலைவனம் தென்பட்டது. அது நீண்ட நெடுந்தொலைவு கொண்டதாக இருந்தது. அதைக் கடக்கும் முன்பாக சல்லியனும், அவனது படைவீரர்களும், குதிரை, யானை போன்ற போர் விலங்குகளும் சோர்வடைந்துபோயின.

அப்போது அந்த பாலைவனத்தில் ஒரு பெரும் பந்தல் தென்பட்டது. அது சல்லியனும், அவனது படையினரும் தங்கும் வகையில் மிகப் பிரமாண்டமாகவே அமைந்திருந்தது. அந்த பந்தலுக்குள் இருந்து வெளிப்பட்டவர்கள், சல்லியனையும், அவனது படையினரையும் வரவேற்று முதலில் தாகம் தணித்தனர். பின்னர் அறுசுவை விருந்து படைத்தனர். அதோடு அவர்களுடன் வந்திருந்த குதிரைகளுக்கும், யானைகளுக்கும் கூட உணவு பரிமாறப்பட்டது. இதைக்கண்டு மனம் மகிழ்ந்த சல்லியன், “இத்தகைய உதவிகளைச் செய்பவர் யாராக இருந்தாலும், அவர் பெரும் புண்ணியவான். நான் அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் கடமைப்பட்டுள்ளேன்” என்று வாய்விட்டே சத்தமாக கூறினான்.

அதுவரை மறைவாக இருந்த துரியோதனன், இப்போது வெளிப்பட்டான். “மாமா.. நான்தான் உங்களுக்காக இந்த ஏற்பாடுகளைச் செய்தேன். நீங்கள் எனக்கு கடமைப்பட்டுள்ளதாக இப்போதுதான் கூறினீர்கள். எனவே இந்தப் போரில் எனக்கு பக்கபலமாக இருந்து போரிட வேண்டும்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டான். சல்லியனுக்கு இப்போது வேறு வழியில்லை.

தான் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டதால், அவ்வப் போது துரியோதனனையும், அவனது தவறுகளையும் குத்திக்காட்டி பேசிவந்தான், சல்லியன். இதனால் துரியோதனனுக்கு சல்லியன் மீது வெறுப்பு உண்டானது. அதன் காரணமாகத்தான், சல்லியனை போர்புரிய அனுமதிக்காமல், கர்ணனின் தேருக்கு சாரதியாக இருக்கும்படி நியமித்தான்.

சல்லியன் மிகப்பெரும் வீரன் என்பது அனை வருக்கும் தெரியும். ஆனால் அவன் பெற்றிருந்த வரம், கண்ணனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சல்லியனை எதிர்த்து கோபத்தோடு எவராது போரிட்டால், அவரது பலம் ஆயிரம் மடங்காக சல்லியனையே போய்ச் சேரும் என்பது அவன் பெற்ற வரம். இது மட்டும் துரியோதனனுக்கு தெரிந்திருந்தால், போர்க்களத்தில் சல்லியனைத்தான் முதன்மையானவனாக இறக்கிவிட்டிருப்பான்.

இதுபற்றி பாண்டவர்களிடம் கண்ணன் தெரிவித்தார். பீமன், சல்லியனோடு போரிடுவதாக கூறினாலும், அவனை கண்ணன் தேர்வு செய்யவில்லை. ஏனெனில் பீமனின் கோபம் அனைவரும் அறிந்ததுதான். சல்லியனுக்கு எதிராக அது வெளிப்படும்போது, பாண்டவர்களுக்குத் தான் பேராபத்து. எனவேதான் கண்ணன், தருமனைத் தேர்வு செய்தார். மேலும் ‘சல்லியனோடு போரிடும்போது, சிரித்த முகத்தோடு யுத்தம் செய்ய வேண்டும்’ என்றும் தர்மனுக்கு போதித்தார்.

அதன்படியே இறுதிநாள் பேரில், சல்லியனுக்கு எதிராக போரிட்ட தருமன், தன்னுடைய முகத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டு கோபத்தை வெளிக்காட்டவில்லை. அதனால் தான் சாதாரண ஈட்டியைக் கொண்டு, ஒரே வீச்சில் சல்லியனை, தருமனால் வீழ்த்த முடிந்தது.
Tags:    

Similar News