செய்திகள்
சாத்தான்குளம் காவல்நிலையம்

எனக்கும்-குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்: சாட்சியம் அளித்த ஏட்டு ரேவதி வேண்டுகோள்

Published On 2020-07-02 02:57 GMT   |   Update On 2020-07-02 02:57 GMT
வியாபாரி-மகன் உயிரிழந்த வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, “எனக்கும்-குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்தார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் சம்பவம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விசாரிக்க கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனை நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சம்பவம் நிகழ்ந்த தினத்தில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தபோது, போலீசார் விடிய, விடிய ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரையும் தாக்கியதாக சாட்சியம் அளித்தார். இதையடுத்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் ஏட்டு ரேவதி, சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமியிடம் மனு வழங்கினார். பின்னர் போலீஸ் ஏட்டு ரேவதி நேற்று முதல் மருத்துவ விடுப்பில் சென்றார்.

இதுதொடர்பாக போலீஸ் ஏட்டு ரேவதி கூறியதாவது:-

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்த வந்த மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனிடம், ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தினத்தில் நடந்த உண்மைகள் அனைத்தையும் தெரிவித்தேன். நான் எனது பணியில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கும் வகையில் செயல்பட்டேன். அது வெளியில் தெரியக்கூடாது என்று நினைத்தேன். ஆனால், இது வெளியில் தெரிந்து, இவ்வளவு பிரச்சனையாகும் என்று நினைக்கவில்லை.

இதுதொடர்பாக எனது உயர் அதிகாரிகள், இதுவரையிலும் என்னிடம் எதுவும் கூறவில்லை. இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது. எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தேவை என்று உணர்கிறேன். உயர் அதிகாரிகளால் டார்ச்சர் வரக்கூடாது. தற்போது நான் மன உளைச்சலாக இருப்பதால், என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் பணிக்கு சென்று திரும்பும்போதும், எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.
Tags:    

Similar News