செய்திகள்

தமிழக எல்லைக்கு வந்தது கிருஷ்ணா தண்ணீர் - இன்று இரவு பூண்டி ஏரிக்கு வரும்

Published On 2019-02-11 10:04 GMT   |   Update On 2019-02-11 10:04 GMT
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு இன்று இரவு சென்றடையும்.
ஊத்துக்கோட்டை:

பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி கடந்த மாதம் ஜதராபாத்தில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேபோல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த 7-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்து விட்டது.

முதலில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் நேற்று மாலை 4.30 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.

பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஹென்றி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சுப்புராஜ், உதவி பொறியாளர்கள் சண்முகம், சதீஷ்குமார், பழனிகுமார், பிரதீஷ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

இந்த நீர் இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று இரவு சென்றடைய வாய்ப்பு உள்ளது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியை நோக்கி 39 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதன் அளவு படிப்படியாக அதிகரிக்கும். கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன்பின் இணைப்பு கால்வாய் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என மொத்தம் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி முதல் தவணையில் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது’ என்றார்.

Tags:    

Similar News