செய்திகள்

முதல்வர் பற்றிய செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு தடை நீடிப்பு

Published On 2019-01-31 07:56 GMT   |   Update On 2019-01-31 08:23 GMT
முதல்-அமைச்சர் குறித்து செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MathewSamuel #MadrasHC #Kodanadissue
சென்னை:

கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

‘தமிழக முதல்-அமைச்சராக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி பதவி ஏற்றேன். என்னுடைய கடினமான உழைப்பினால், அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு அரசியல்வாதியாக எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றி வருகிறேன்.

இந்த நிலையில், வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலும், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அவதூறு தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பேட்டியை கடந்த 11-ந்தேதி ‘யூடியூப்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி அவர்கள் அளித்த பேட்டியை நாரதா நியூஸ் என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.



தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவதூறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக சுமத்தப்படுகிறது. எனவே, என்னை பற்றி அவதூறான செய்தி வெளியிடவும், பேட்டிக் கொடுக்கவும் நாரதா நியூஸ் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட 7 பேருக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த 23-ந்தேதி விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், முதல்அமைச்சர் குறித்து அவதூறு செய்தி வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேத்யூ சாமுவேலுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் நோட்டீசு மேத்யூ சாமுவேலுக்கு சென்றடையவில்லை என்று கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை முதல்அமைச்சர் குறித்து செய்தி வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார். #MathewSamuel #MadrasHC #Kodanadissue
Tags:    

Similar News