செய்திகள்
குண்டுவைத்து தகர்க்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பு

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வெடிமருந்து நிரப்பும் பணி முடிந்தது

Published On 2020-01-09 09:23 GMT   |   Update On 2020-01-09 09:23 GMT
கேரள மாநிலம் கொச்சியில் மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை தகர்ப்பதற்காக வெடிமருந்துகளை நிரப்பும் பணி நிறைவு பெற்றுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியில் மரடு பகுதியில் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உத்தரவிடகோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி 4 அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடிக்க உத்தரவிட்டனர்.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மரடு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த பொதுமக்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மரடு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட, ஹெச் டூஓ ஹோலி பெய்த், ஆல்பா செரைன், ஜெயின் கோரல் கேவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் குண்டு வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக நாளை மறுநாள் (11-ந்தேதி) காலை 11 மணிக்கு ஹெச் டூஓ ஹோலி பெய்த் அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவைத்து தகர்க்கப்படும். அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு ஆல்பா செரைன் அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்படும்.

அதன்பின்னர் மறுநாள் (12-ந்தேதி) ஜெயின் கோரல் கேவ் அடுக்குமாடி குடியிருப்பு காலை 11 மணிக்கும், கோல்டன் காயலோரம் அடுக்குமாடி குடியிருப்பு பகல் 2 மணிக்கும் தகர்க்கப்படும்.

முதல் கட்டமாக 11-ந்தேதி இடிக்கப்படும் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை தகர்ப்பதற்காக வெடிமருந்துகளை நிரப்பும் பணி நிறைவு பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடாமல் இருக்க தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இறுதி கட்டமாக அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுமக்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்ய அங்குள்ள 250 வீடுகளையும் பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்து உள்ளனர். நாளை இந்த பகுதி முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். அதன் பிறகு 11-ந்தேதி வெடிகுண்டு மூலம் 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் தகர்க்கப்பட உள்ளது.


Tags:    

Similar News