செய்திகள்
கதிர்வேல்

மாணவரின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு- தந்தை, உறவினர்கள் மீது வழக்கு

Published On 2020-10-16 04:20 GMT   |   Update On 2020-10-16 04:20 GMT
நாமகிரிப்பேட்டை அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர் உடலை போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாணவரின் தந்தை, உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை:

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கார்கூடல்பட்டி செம்பாடிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். மரவள்ளி கிழங்கு தரகர். இவருக்கு பழனியம்மாள், சிவகாமி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி சிவகாமியின் மகன் கதிர்வேல் (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவர்கள் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள்.

மாணவர் கதிர்வேல் மருத்துவம் படிக்க நீட் தேர்வு மையம் ஒன்றில் பயிற்சி பெற்று, சமீபத்தில் நடந்த நீட் தேர்வு எழுதியுள்ளார். தற்போது வீட்டில் இருந்து வந்ததால் அடிக்கடி செல்போனை உபயோகித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பழனியப்பன், சிவகாமி ஆகியோர், அவரை வேலைக்கு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் மாணவர் தான் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்றும், அதனால் வேலைக்கு செல்லமாட்டேன் என்றும் கூறினார்.

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றோர், கதிர்வேலை ஏதாவது வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கதிர்வேல், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர், தூக்கில் பிணமாக தொங்கிய மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் மாணவனுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசுக்கு தெரியாமல் அங்குள்ள மயானத்தில் மாணவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் மாணவர் தற்கொலை சம்பவம் குறித்தும், உடல் எரிக்கப்பட்டது குறித்தும் கார்கூடல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா, ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் செம்பாடிபுதூருக்கு விரைந்து சென்று கதிர்வேலின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவர் தற்கொலை செய்து கொண்டதையும், போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததால், பழனியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News