செய்திகள்
கோப்புப்படம்

தங்கம் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சந்தீப் நாயர் விடுவிப்பு

Published On 2021-01-05 20:17 GMT   |   Update On 2021-01-05 20:17 GMT
தங்கம் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகையை கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்து உள்ளது. இதில் சந்தீப் நாயர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் சிக்கினர்.

இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இதுவரை 21 பேர்களை கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், கெ.டி ரமீஸ் உள்பட 35 பேர் மீது குற்றப்பத்திரிகையை நேற்று விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ண பிள்ளை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்ட 6 மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகையில் இடம் பெற்ற 35 பேரில் தற்போது 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

அதே நேரத்தில் தங்க கடத்தலுக்கு பணம் செலுத்திய 12 பேர் தற்போது ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயர் நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து அப்ரூவராக மாறியதை தொடர்ந்து, அவர் குற்றப்பத்திரிகையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

தங்கம் கடத்தலில் தொடர்புடைய வெளி நாட்டினரையும் கைது செய்ய என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளது.
Tags:    

Similar News