செய்திகள்
பிரதமர் மோடி

புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் - பிரதமர் மோடி உறுதி

Published On 2021-05-16 18:43 GMT   |   Update On 2021-05-16 18:43 GMT
புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறது.
புதுச்சேரி:

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசினார்.



அப்போது புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவின் தற்போதைய சூழ்நிலை குறித்த முழு விவரங்களையும் பிரதமர் கேட்டறிந்தார். மேலும் கொரோனா நோய் தொற்று விகிதம், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது போன்ற விவரங்களை துல்லியமாக கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரிக்கு ஏற்கனவே அளித்த உதவிகளுக்கும் மேலாக மேலும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதி அளித்தார். மத்திய அரசால் புதுவை மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்றும் பிரதமர் கேட்டறிந்தார்.

அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமரிடம், தனது வேண்டுகோளுக்கிணங்க கொரோனா சிகிச்சைக்காக மத்திய அரசு வழங்கிய மருத்துவ உதவிகளுக்கும், உபகரணங்களும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மேலும் பிரதமர் மோடி, சென்னையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை குறித்தும் நலம் விசாரித்தார்.

அவர் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தன் விருப்பத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
Tags:    

Similar News