செய்திகள்
அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவர்கள் நடுரோட்டில் மயங்கி கிடந்தனர்.

கோவையில் இன்று காலை 2 வாலிபர்களை வெட்டி சாய்த்த கும்பல்

Published On 2019-05-14 10:36 GMT   |   Update On 2019-05-14 10:36 GMT
கோவையில் இன்று காலை சினிமாவை மிஞ்சும் அளவுக்கு 2 வாலிபர்களை முன்விரோத தகராறில் 4 பேர் கும்பல் விரட்டி விரட்டி வெட்டி சாய்த்தனர்.
கோவை:

கோவை கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (19). இவர் மீது சரவணம்பட்டி போலீசில் ஒரு அடி-தடி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப்புக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி அவர் தினமும் கோவை ஜே.எம். எண்.2-வது கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இன்று காலையும் பிரதீப் வழக்கம் போல் கையெழுத்து போட தனது நண்பர் தமிழ் (25) என்பவருடன் மொபட்டில் கோவை கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்ஆகி பிரதீப் கையெழுத்து போட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது பிரதீப் மொபட் ஓட்ட, பின்னால் அவரது நண்பர் தமிழ் உட்கார்ந்து இருந்தார்.

கோர்ட்டில் இருந்து பிரதீப், தமிழ் ஆகியோர் வெளியே வந்ததும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த 4 பேர் கும்பல் அவர்களை விரட்டினர். இதையடுத்து பிரதீப் மொபட்டை வேகமாக ஓட்டினார். ஆனாலும் 4 பேர் கும்பல் அவர்களை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டினர். பட்டப்பகலில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் பகுதியில் சினிமாவில் வருவது போல் கும்பல் 2 பேரை விரட்டி வெட்டினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரதீப், தமிழ் ஆகியோர் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே நிலைகுலைந்து கீழே விழுந்தனர். ஆனால் கொலை வெறி தீராத கும்பல் 2 பேரையும் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து 4 பேர் கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

கோர்ட்டு, போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் 2 பேர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில்கிடந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களின் நிலைமை கவலை கிடமாக உள்ளது.

போலீசாரின் முதல் கட்டவிசாரணையில் முன் விரோத தகராறு காரணமாக கணபதியை சேர்ந்த சதீஷ், ஹரி, தனபால், சூர்யா ஆகிய 4 பேர் சேர்ந்து பிரதீப், தமிழ் ஆகியோரை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கோர்ட்டில் இருந்து உப்பிலி பாளையம் சிக்னல் வரை சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு விரட்டி, விரட்டி கும்பல் வெட்டியதால் ரோடு முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது. மேலும் மொபட் முழுவதும் ரத்தக்கறை படிந்து கிடந்தது.
Tags:    

Similar News