செய்திகள்
ஆசனூர் அருகே சிறுத்தை மரத்தில் அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம். (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது).

சாலையோரம் மரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை- சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

Published On 2020-10-22 04:19 GMT   |   Update On 2020-10-22 04:19 GMT
ஆசனூர் அருகே சாலையோரம் மரத்தில் சிறுத்தை அமர்ந்து இருப்பதுபோன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானை, புலி, சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகள் ஆசனூர், திம்பம் வனப்பகுதி சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது.

இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். கார், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்கள் தொடர்ந்து அந்த வழியாக சென்று வருகின்றன. அப்போது சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் ரோட்டை கடந்து செல்வதை நேரில் பார்க்கும் பலர் அதை செல்போனில் படம் எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆசனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று முன்தினம் மாலை ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது அப்போது சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் சிறுத்தை ஹாயாக அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து தங்கள் வாகனத்தை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர்.

பின்னர் வாகனத்தில் இருந்தபடியே ஒருவர் செல்போனில் சிறுத்தையை வீடியோ எடுத்தார். உடனே சிறுத்தை மரத்தில் இருந்து கீழே குதித்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

Similar News