வழிபாடு
பல்வேறு இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் பூக்களை கொண்டு சென்ற காட்சி.

பூச்சொரிதல் விழா: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-03-28 03:01 GMT   |   Update On 2022-03-28 03:01 GMT
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான பூச்சொரிதல் விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் பூச்சொரிதல் முக்கியமானதாகும். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில், திருச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி பயபக்தியுடன் வழங்கினர்.

மேலும், 62-ம் ஆண்டாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் அமைந்துள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்து அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் படத்தை வைத்தும், யானையின் மீது பூக்களை வைத்தும் வாணவேடிக்கைகள் முழங்க சமயபுரம் சிறுகடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் நிர்வாகிகள், குடும்பத்தினர், சமயபுரம் கண்ணனூர் பூர்வீக குடிமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பூக்களை சுமந்து கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

இதேபோல, சமயபுரம் போலீஸ் நிலையம் சார்பாக 29-வது ஆண்டாக திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தலைமையில் போலீசார் தங்களது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்தில் இருந்து யானை மீது பூக்களை வைத்து மேளதாளங்கள், அதிர் வேட்டுகள் முழங்க ஊர்வலமாக பூக்களை சுமந்து கோவிலை அடைந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக தலைவர் சரவணன் தலைமையில் செயல் அலுவலர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாக பூக்களை எடுத்துச்சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இரவு புதிய பஸ் நிலையம் அருகே இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.3-வது பூச்சொரிதலையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் கோவிலில் குவிந்ததால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News