செய்திகள்
போலீசார்

பரமத்தி அருகே கோவில் வளாகத்தில் சந்தன மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்- போலீஸ் வலைவீச்சு

Published On 2021-04-11 12:46 GMT   |   Update On 2021-04-11 12:46 GMT
கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாண்டீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. சுமார் ஆயிரம் வருடங்கள் பழமையான இக்கோயில் வளாகத்தில் சந்தன மரம் ஒன்று கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு சிலர் இந்த மரத்தின் அடிபாகத்தில் வெட்டியிருந்தனர். அதன் காரணமாக சந்தன மரத்தை பாதுகாக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் இரும்பு குழாய் அமைத்து பாதுகாத்து வந்தனர். சுமார் 30 அடி உயரமுள்ள இந்த சந்தன மரத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று இரவு மரத்தை அடியோடு வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் சந்தன மரத்தை குச்சிபாளையம் அருகே உள்ள தேங்கரம்பாளையம் காவிரிப்படுகையில் உள்ள குட்டு காட்டிற்கு எடுத்துச்சென்று சந்தன மரத்தின் உள் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மேலே உள்ள பட்டைகளை குட்டுக் காட்டியிலேயே தூக்கி வீசிவிட்டு மர்மநபர்கள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அறநிலையத்துறை செயல் அலுவலர் கலைவாணி பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீசார் குச்சிபாளையத்தில் உள்ள பாண்டீஸ்வரர்‌ கோவிலில் இருந்து சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News