ஆன்மிகம்

சத்யவான் - சாவித்ரி

Published On 2019-04-18 08:29 GMT   |   Update On 2019-04-18 08:29 GMT
சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன் என்று தெரிந்தும் அவனை திருமணம் செய்து கொண்ட சாவித்ரி எமதர்மனிடம் இருந்து சத்யவான் உயிரை எப்படி மீட்டெடுத்தாள் என்பதை பார்க்கலாம்.
விதிப்பயன் காரணமாக சத்யவான் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து, பெற்றோருடன் காட்டில் வசித்து வந்தான். அவனை வனத்தில் சந்தித்த இளவரசியான சாவித்ரி, காதல் வயப்பட்டாள். அவனையே திருமணம் செய்து கொள்ள எண்ணினாள். நாரதர், “சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன். அவனை திருமணம் செய்து கொண்டு என்ன பயன்” என்றார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சாவித்ரி, தனது தந்தையை தொடர்ந்து வற்புறுத்தி சத்யவானையே திருமணம் செய்து கொண்டாள். திருமணத்திற்கு பிறகு சாவித்ரி சத்யவானுடன் காட்டிலேயே வசித்து வந்தாள்.

ஒரு நாள் சத்யவானின் ஆயுள் காலம் முடிவடையும் நேரம் வந்தது. எமதர்மன் அங்கு வந்து, சத்யவானின் உயிரைப் பறித்துச் சென்றான். இதையடுத்து சத்யவான் உயிரற்ற உடலாக தரையில் விழுந்தான். சாவித்ரி தொடர்ச்சியாக அம்மனை நினைத்து விரதம் இருப்பவள் என்பதால், அவளது கண்ணுக்கு எமதர்மன் தென்பட்டார். தன்னுடைய கணவனின் உயிரை பறித்துச் செல்லும் எமதர்மனை, சாவித்ரி பின்தொடர்ந்தாள். எமன் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அவள் சத்யவான் இன்றி திரும்பிச் செல்வதாக இல்லை.

“சத்யவானின் உயிரைத் தவிர வேறு எந்த வரமாவது கேள்” என்று எமதர்மன் கூறியதும், சாவித்ரி சமயோசிதமாக செயல்பட்டு ஒரு வரத்தைக் கேட்டாள். அதாவது “என் கணவரின் மூலம் நான் 100 பிள்ளைகள் பெற வேண்டும்” என்று கேட்டாள். எமனும் யோசிக்காது, “அப்படியே ஆகட்டும்” என்று வரமளித்தார். பின்னர்தான் கொடுத்த வரத்தின் பின் விளைவை எமதர்மன் சிந்தித்தார்.

இருப்பினும் சாவித்ரியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்த எமதர்மன், சத்யவானின் உயிரை அவளுக்கு திரும்பிக் கொடுத்தார். எம தர்மனின் ஆசியுடன் சத்யவான்-சாவித்ரி தம்பதியினர் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
Tags:    

Similar News