ஆன்மிகம்
சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த காட்சி.

திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா

Published On 2021-02-24 02:50 GMT   |   Update On 2021-02-24 02:50 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 7-ம் நாளில் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவின் 7-ம் திருநாளான நேற்று விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந்து உருகு சட்ட சேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News