செய்திகள்
ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு

ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு

Published On 2021-08-25 03:52 GMT   |   Update On 2021-08-25 03:52 GMT
நாடு முழுவதும் ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின்கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி

மராட்டியத்தில் சிறுமியை ஆடையுடன் தீண்டியது பாலியல் சீண்டலாகாது என தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் சதீஷை மும்பை ஐகோர்ட்டு விடுவித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ஒருவர் மருத்துவ அறுவை சிகிச்சைக்கான கையுறை அணிந்துகொண்டு ஒரு பெண்ணின் முழு உடலையும் தொட்டால், மும்பை ஐகோர்ட்டு உத்தரவுப்படி அது பாலியல் சீண்டல் ஆகாது, அதற்காக அவர் தண்டிக்கப்பட மாட்டார். உடலோடு உடல் தீண்டும்போது மட்டுமே பாலியல் சீண்டல் என்றாகிவிடும். நாடு முழுவதும் ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின்கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என வாதிட்டார். மராட்டிய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் சிட்டினிஸ் இந்த வாதத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் சார்பில் வக்கீல் யாரும் ஆஜராகாததைத் தொடர்ந்து, அவர் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு சட்டப்பணிகள் குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News