செய்திகள்
கைது

கோவை அருகே வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது

Published On 2019-10-15 10:27 GMT   |   Update On 2019-10-15 10:27 GMT
வீடு புகுந்து திருடிய 3 வாலிபர்கள் கைது பள்ளி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு

கோவை:

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் ஜெய்சன் ரிஜோ (21). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் நுழைந்த 3 வாலிபர்கள் அங்கு இருந்த லேப்டாப்களை திருடிச் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

அந்த சத்தத்தைக் கேட்டு திடீரென எழுந்த ஜெய்சன் ரிஜோ அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கிப் பிடித்து செட்டிபாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த அருண் (20), கலையரசன் மற்றும் தேனியைச் சேர்ந்த அஸ்வந்த் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுக்கரையைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி பார்வதி (58). தனியார் பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது அக்கா வீட்டுக்கு செல்வதற்காக மதுக்கரை காந்திநகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பார்வதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து மதுக்கரை போலீசில் அவர் புகார் தெரிவித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

கோவை சோமனூர் குமரன் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வழக்கம் போல பூசாரி இரவு பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி சென்றார். பின் இரவு 1 மணி அளவில் கோவிலில் சத்தம் வருவதை கேட்டு கோவிலின் அருகே வசித்து வரும் ஈஸ்வரமூர்த்தி எழுந்து சென்று பார்த்தார். அப்போது கோவிலின் மதில் சுவர் ஏறி குதித்து 3 திருடர்கள் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் கருமத்தம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி, செந்தில்குமார் (28), கோபாலகிருஷ்ணன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News