அழகுக் குறிப்புகள்
கன்னத்தின் அழகை அதிகரிக்க...

கன்னத்தின் அழகை அதிகரிக்க...

Published On 2021-12-06 07:34 GMT   |   Update On 2021-12-06 07:34 GMT
வாய்க்குள் காற்றை நிரப்பி, கன்னங்களை உப்பியபடிவைத்து பயிற்சி செய்தால் முக தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அது கன்ன தசைகளை வலுப்படுத்த உதவும்.
வயிற்றில் கொழுப்பு படிந்து தொப்பை உருவாகுவதுபோல் சிலருக்கு கன்னங்களில் கொழுப்பு படிந்து காணப்படும். அத்தகைய கன்னங்கள் தொடக்கத்தில் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் நாளடைவில் தொங்கி, அழகற்றதாகிவிடும். எளிமையான முக பயிற்சிகள் மூலம் முகத்தில் படியும் கொழுப்பை போக்கிவிடலாம்.

வாய்க்குள் காற்றை நிரப்பி, கன்னங்களை உப்பியபடிவைத்து பயிற்சி செய்தால் முக தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அது கன்ன தசைகளை வலுப்படுத்த உதவும். முக தோற்றத்திற்கும் அழகு சேர்க்கும். இந்த பயிற்சியை செய்வது எளிதானது. காற்றை உள்ளிழுத்து கன்னங்களை உப்பியடி வைத்துக்கொள்ள வேண்டும். அதே நிலையில் 10 வினாடிகள் வைத்துவிட்டு, பின்பு கன்னத்தின் வலது பக்கத்திற்கு காற்றை திருப்பி உப்பியடி வைத்திருக்க வேண்டும். 10 வினாடிகள் கழித்த பிறகு இடது புறமாக உப்பவைத்தபடி 10 வினாடிகள் இருக்க வேண்டும். இப்படி அவ்வப்போது செய்துவரலாம்.

விரல்களால் புருவங்களை அழுத்தி மசாஜ் செய்யலாம். இது நெற்றியில் உள்ள ப்ரன்டிஸ் தசைகளின் செயல்பாடுகளால் ஏற்படும் நெற்றி சுருக்கத்தை போக்கும். இந்த பயிற்சிக்காக புருவங்களுக்கு இடையே ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலை வைத்துகொள்ளவும். மற்ற விரல்களையும், உள்ளங்கையையும் கன்னத்தையொட்டியபடி வைத்துக்கொள்ளுங்கள். கண்களை திறந்தநிலையில் வைத்தபடி விரல்களின் உதவியுடன் புருவங்களை மேலும், கீழும் அசைத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு 30 வினாடிகள் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று முறை செய்து வரலாம். இது புருவங்களுக்கும், கன்னத்திற்கும் பொலிவு சேர்க்கும்.

* உதட்டை வாய்க்குள் தள்ளியபடியோ அல்லது உதட்டு பகுதியை வாயின் ஒரு மூலையில் தள்ளியபடியோ வைத்தபடி, கழுத்து தசைகளுக்கு 10 வினாடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போது வாய், கழுத்து, கன்ன தசைகள் இலகுவாகும். முகத்தில் உள்ள கொழுப்பும் குறையும். தாடையும் அழகு வடிவம் பெறும்.

* கன்னத்தின் இருபுறமும் விரல்களைவைத்து அழுத்தி கீழ் இருந்து மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வாயை திறந்து டி, ஓ வடிவில் வைத்திருக்க வேண்டும். அப்போது விரல்களை கன்னத்தில் அழுத்தியபடி அதே நிலையில் 10 வினாடி கள் இருக்கவேண்டும். இந்த பயிற்சியை செய்யும்போது கன்ன தசைகளில் அழுத்தம் ஏற்படுவதை உணரலாம். தினமும் 10 முறை இந்த பயிற்சியை செய்து வரலாம். கன்ன தசைகளை இறுக்கமடைய வைக்கவும், முக கொழுப்பை குறைக்கவும், கன்னத்தின் அழகை பராமரிக்கவும் இந்த பயிற்சிகள் உதவும்.

Tags:    

Similar News