செய்திகள்
வெட்டப்பட்ட மரத்தால் கண்ணீர் விடும் சமூக ஆர்வலர்

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம்: 144 தடை உத்தரவு

Published On 2019-10-05 06:11 GMT   |   Update On 2019-10-05 06:11 GMT
மும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, மரங்களை வெட்டும் பணி நேற்று நள்ளிரவே துவங்கியது. 

இதற்காக மரம் வெட்டும் இயந்திரங்கள், புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு மரங்கள் வெட்டும் பணியில் நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் இரவு முழுவதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்றும் போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

மகாராஷ்டிராவில் வரும் 21-ம் தேதி  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆரே காலனி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News