ஆன்மிகம்
கள்ளழகர் பெருமாள்

அழகர்மலை நூபுர கங்கையில் தைல காப்பு திருவிழா 28-ந் தேதி நடக்கிறது

Published On 2020-10-16 08:47 GMT   |   Update On 2020-10-16 08:47 GMT
கள்ளழகர் பெருமாள் 28-ந் தேதி அழகர்மலை நூபுர கங்கை செல்லும் வழியில் உள்ள அனுமார் தீர்த்தம், கருட தீர்த்த எல்லைகளில் பல்லக்கு நிறுத்தப்பட்டு சுவாமிக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தைல காப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவானது வருகிற 26-ம் தேதி தொடங்குகிறது. அன்று மாலையில் ரிஷப லக்கனத்தில் ராஜாங்க சேவையுடன் கள்ளழகர் பெருமாளுக்கு உற்சவம் தொடங்கும். 27-ந் தேதி 2-ம் திருநாள் மேட்டுகிருஷ்ணன் சன்னதியில் சீராப்பதிநாதன் சேவையும் நடைபெறும்.

28-ந் தேதி புதன்கிழமையன்று 3-ம் திருநாள் காலை 6.45 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் துலா லக்கனத்தில் இருப்பிடத்தில் இருந்து கள்ளழகர் பெருமாள் அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு பெருமாள் நூபுரகங்கைக்கு பல்லக்கில் புறப்பாடு ஆகிறார். பின்னர் அழகர்மலை நூபுர கங்கை செல்லும் வழியில் உள்ள அனுமார் தீர்த்தம், கருட தீர்த்த எல்லைகளில் பல்லக்கு நிறுத்தப்பட்டு சுவாமிக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும்.

இதைதொடர்ந்து அங்கிருந்து புறப்பாடாகி நூபுரகங்கைக்கு காலை 11.30 மணிக்கு சென்று ராக்காயி அம்மன் கோவில் மண்டபத்தில் எழுந்தருளுவார். மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் தைல காப்பு பூஜைகள் நடைபெறும். 1.45 மணிக்கு மேல் 2.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாளுக்கு, திருதைலம் சாத்தப்பட உள்ளது. பின்னர் அங்குள்ள தீர்த்த தொட்டியில் தீர்த்தவாரி நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பின்னர் வந்த வழியாகவே சுவாமி சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. அரசு வழிகாட்டுதல்படி நடைபெறும் திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக, மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், அழகர்கோவிலிலும் விஜயதசமி விழா வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது.. இந்த விழா அனைத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு சமூக இடைவெளியினை கடைபிடித்து நடக்கிறது. மேலும் கோவிலில் அம்பு விடும் விழா நிகழ்வு மட்டும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நேரங்களில் வழக்கம் போல் விதிமுறைகளுக்கு உட்பட்டு சாமி தரிசனம் செய்து கொள்ளலாம். இந்த தகவல் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News