செய்திகள்
மட்டன் பிரியாணி

ஜூஸ்... மட்டன் பிரியாணி என திருவிழா போல் நடந்த உள்ளாட்சி தேர்தல்- இளைஞர்கள் படு உற்சாகம்

Published On 2021-10-09 09:50 GMT   |   Update On 2021-10-09 09:50 GMT
வாக்குச்சாவடிக்கு வெளியில் அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் வாக்காளர்களை ஜூஸ் கொடுத்து வரவேற்ற காட்சிகளை பல இடங்களில் காண முடிந்தது.
வேலூர்:

வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. இதையொட்டி 469 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. மக்கள் வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.

நேரம் செல்ல செல்ல கூட்டம் குறையும் என எண்ணியிருந்த நிலையில் அதிகப்படியான மக்கள் வாக்களிக்க வந்துகொண்டே இருந்தனர். அவர்களை வாக்குச்சாவடிக்கு வெளியில் அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஜூஸ் கொடுத்து வரவேற்ற காட்சிகளும் பல இடங்களில் காண முடிந்தது. தவிர பெரும்பாலான வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பிரியாணி, பஜ்ஜி, போண்டா சமையலும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சைவ பிரியர்களுக்கு சாப்பிடுவதற்காக தனியாக தக்காளி சாதம், பிரிஞ்சி போன்ற சாதங்களும் தயாராகிக்கொண்டிருந்தன.

இதுகுறித்து அங்கிருந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கூறும்போது;-

வாக்களிக்க வரும் மக்களுக்கு விருந்து உபசரிக்க சமைக்கப்படுவதாகவும் இதனால் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருவதாகவும் தெரிவித்தனர். அந்த வகையில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மேலும் குளிர்பானங்கள், ஜூஸ் வகைகளும் ஆங்காங்கே மோரும் தயார் நிலையில் செய்யப்பட்டிருந்தது.

இது தவிர இளைஞர்கள் பலரும் உற்சாகமுடன் காணப்பட்டனர். இன்னும் மலைக்கிராமங்களில் மிகவும் உற்சாகமாக இருந்தனர்.

அந்தவகையில் வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஒரு திருவிழா போல காட்சியளித்தது.

Tags:    

Similar News