லைஃப்ஸ்டைல்
இந்த பழக்கவழக்கங்களை பின்பற்றினால் கருவளையம் வராமல் தவிர்க்கலாம்..

இந்த பழக்கவழக்கங்களை பின்பற்றினால் கருவளையம் வராமல் தவிர்க்கலாம்..

Published On 2021-07-05 04:26 GMT   |   Update On 2021-07-05 16:08 GMT
ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும், கருவளையங்களை குறைப்பதற்கும் வைட்டமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கண்களுக்கு அடியில் தோன்றும் கருவளையங்கள் சோர்வையும், மந்தமான உணர்வையும் மட்டும் தோற்றுவிப்பதில்லை. சருமத்தின் இயற்கையான அழகையும் பாழ்படுத்திவிடும். கருவளையம் படர்ந்த பின்னர்தான் அதனை போக்குவதற்கான வழிமுறைகளை பலரும் நாடுகிறார்கள். ஒருசில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே கருவளைய பாதிப்பு நேராமல் நிரந்தரமாக தற்காத்துக்கொள்ளலாம். அதற்கு பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்:

1. நீர்ச்சத்து: தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் கருவளைய பாதிப்பையும் தவிர்த்துவிடலாம். தினமும் குறைந்தபட்சம் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் அதிகம் பருகுவது கண்களில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். கண் பகுதியில் சூழ்ந்திருக்கும் உப்பு செறிவின் அளவும் குறையும். அதனால் கருவளையம் எட்டிப்பார்க்காது.

2. வைட்டமின்கள்: கொலாஜன் அளவு குறைவது கருவளையங்கள் தோன்றுவதற்கான மற்றொரு காரணமாகும். கண்களின் அடிப்புற இமை பகுதியில் வீக்கம் தோன்றுவதற்கும் வழிவகுத்துவிடும். கொலாஜன் அமினோ அமிலங்களால் ஆனது என்பதால், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். வைட்டமின் ஏ, அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை கொண்டது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிறமிகளின் செயல்பாடுகளை குறைக்கும் திறன் கொண்டது. அதன் காரணமாக கருவளையம் தோன்றுவது கட்டுப்படுத்தப்படும். ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும், கருவளையங்களை குறைப்பதற்கும் வைட்டமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தக்கூடியவை.

3. தூக்கம்: சரியான தூக்க சுழற்சி அழகை மேம்படுத்தும் சக்தி கொண்டது. தூங்கும்போது சருமம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள தொடங்கிவிடும். புதிய செல்களை உருவாக்குவதுடன் ஆக்சிஜன் சுழற்சிக்கும் வழிவகை செய்யும். போதுமான தூக்கம் இல்லாதபோது சருமம் தன்னை புதுப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆக்சிஜன் சுழற்சியும் குறைந்துவிடும். அதன் காரணமாக கண்களுக்கு அடிப்பகுதியில் இருக்கும் மென்மையான தன்மை கொண்ட சரும அடுக்கில் ரத்த ஓட்டத்தின் அளவு மாறுபடும். அந்த பகுதியில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தம் அதிகமாகத் தெரியும். அவை கருவளைய வட்டங்கள் தோன்றுவதற்கு காரணமாகிவிடும்.

4. சன்ஸ் கிரீன்: வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெளியே சென்றாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் சாதனங்கள், கணினிகள், டி.வி.களில் இருந்து நீல ஒளி கதிர்களும் சருமத்தை சேதப்படுத்துகின்றன. புற ஊதாக்கதிர்கள் வயதான அறிகுறிகளை தோற்றுவித்துவிடும். சருமம் நெகிழ்வு தன்மையை இழந்து சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்ளும்.

மெலனின் என்பது சரும நிறம், கண், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை நிறமியாகும். உடலில் இருக்கும் மெலனின் அளவு
சருமத்தின் நிறத்தை தீர்மானிக்கும். சூரிய கதிர்கள் மற்றும் நீல ஒளியின் வெளிப்பாடு, மெலனின் அளவை அதிகரிப்பதால் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக கண்களின் அடிப்பகுதி பாதிப்புக்குள்ளாகி கருவளையம் தோன்றக்கூடும். கடுமையான சூரிய கதிர்கள், கணினி, மொபைல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு எஸ்.பி.எப் 35-க்கும் அதிகமாக இருக்கும் சன்ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும்.

5. கிரீம்: கருவளையத்தை போக்குவதற்கு கிரீம்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அத்தகைய கிரீம்களில் வைட்டமின் சி, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் இருக்க வேண்டும்.  ஆரம்ப நிலையிலேயே கிரீம்கள் பயன்படுத்துவதன் மூலம் கருவளைய பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

Tags:    

Similar News