செய்திகள்
பணம் பறிமுதல்

வருமானவரி சோதனையில் கட்டுமான நிறுவனத்தில் ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்

Published On 2020-12-18 02:06 GMT   |   Update On 2020-12-18 02:06 GMT
ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது. இதில் ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:

‘ஸ்ரீபதி அசோசியேட்ஸ்’ என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஈரோடு காளைமாட்டுசிலை அருகில் தங்கபெருமாள் வீதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 14-ந் தேதியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வந்தனர். 4-வது நாளாக தொடர்ந்த இந்த சோதனை நேற்று பகலில் நிறைவு அடைந்தது. 15 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

இந்த கட்டுமான நிறுவனத்தின் சார்பில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படுகிறது. மேலும், பஸ் போக்குவரத்து, ரியல் எஸ்டேட், மசாலா நிறுவனம், திருமண மண்டபம் போன்ற தொழில்களும் நடக்கிறது.

வருமானவரி சோதனையில் கட்டுமான நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத ரூ.21 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் மற்ற தொழில்கள் விரிவாக்கம் செய்வதற்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்களும், ரூ.21 கோடியும் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News