ஆன்மிகம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-01-20 09:27 GMT   |   Update On 2021-01-20 09:27 GMT
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கிய இத்திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்டம் உவரியில் கடலோரத்தில் சுயம்புலிங்கசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இது சுயம்பு வாக உருவாகிய அற்புதமான ஆலயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குவது வழக்கம்.

இந்த திருவிழாவில் நெல்லை மட்டுமல்லாமல் குமரி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு தைப்பூச விழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கப்பட வேண்டும். இந்நிலையில் கொடியேற்றத்திற்கான பணிகள் குறித்து அறிவதற்காக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு வந்தார். அப்போது அங்கு விழா நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதுகுறித்து அற நிலையத்துறை இணை கமி‌ஷனரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் கோவில் திருவிழாவை இன்று கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்து விட்டு சென்று விட்டார்.

இதையடுத்து அங்கு வந்த விஸ்வஹிந்து பரி‌ஷத் மாநிலத்தலைவர் பெரி குலைக்காதர் தலைமையில் ஊர் மக்கள் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இன்று காலைக்குள் திருவிழாவை நடத்த கொடியேற்றவில்லை என்றால் பொன் ராதா கிருஷ்ணன் தலைமையில் உண்ணா விரதம் இருக்க போவதாகவும் அறிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் தேரோட்டத்தை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். அதற்கு தேரை சீரமைக்க வேண்டி உள்ளதால் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என அறநிலையத்துறை இணை கமி‌ஷனர் பரஞ்ஜோதி தெரிவித்தார்.
Tags:    

Similar News