செய்திகள்
வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயிகள்.

தடுப்புச்சுவர் கட்டக்கோரி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Published On 2019-11-21 14:45 GMT   |   Update On 2019-11-21 14:45 GMT
தடுப்புச்சுவர் கட்டக்கோரியும், ஆத்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பழனி:

பழனி பெரிய கல்லக்காட்டு மடை பகுதி விவசாயிகள் 10-க்கும் மேற்பட்டோர் பழனி ரோப்கார் நிலையம் அருகே உள்ள ராஜவாய்க்கால் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது, பெரிய கல்லக்காட்டு மடை பகுதியில் தடுப்புச்சுவர் கட்டக்கோரியும், ஆத்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வரதமாநதி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் ராஜவாய்க்கால் வழியே வையாபுரிகுளம், சிறுநாயக்கன்குளத்துக்கு செல்கிறது. இதில் பெரிய கல்லக்காட்டு மடை பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இந்த விளைநிலங்களுக்கு கல்லக்காட்டு மடை பகுதி வழியே தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் மடை பகுதியில் பெரிய பள்ளம் காணப்படுவதால் அங்கு மணல் மூட்டைகளை அடுக்கினால் தான் எங்கள் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள பணிகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

அப்போது, பெரிய கல்லக்காட்டு மடை பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு தடுப்பணை கட்டப்படுவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அங்கு ஓடையில் தண்ணீர் செல்லும் வகையில் மட்டும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். மேலும் ஆத்துவாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News