செய்திகள்
சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா?

Published On 2019-11-11 06:55 GMT   |   Update On 2019-11-11 06:55 GMT
சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த சுமார் ரூ.320 கோடி இந்தியர்களின் கருப்பு பணத்தை யாரும் உரிமைகோர முன்வரவில்லை.
புதுடெல்லி:

வெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முக்கிய அரசியல்வாதிகளும், பல்வேறு தொழில் அதிபர்களும் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்த வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள இந்தியாவும் சுவிஸ் நாடும் ஒப்பந்தம் செய்துள்ளன.

இதன்படி, முதல் கட்ட விவரங்கள் இந்தியாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. 1955 முதல் செயல்பாடு இல்லாத வங்கி கணக்குகளின் பட்டியலை சுவிஸ் அரசு 2015-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் இந்தியாவை சேர்ந்த 10 பேரின் கணக்கு உள்பட 2 ஆயிரத்து 600 பேரின் வங்கி கணக்குகள் இடம் பெற்று இருந்தன.



செயல்பாடு இல்லாத இந்த பணம் இந்திய மதிப்பில் ரூ. 320 கோடி. இதில் பெரும்பான்மை பணம் இந்தியர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பணத்துக்கு சொந்தமானவர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் உரிமை கோரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் இந்தியர்கள் யாரும் தங்கள் பணத்துக்கு உரிமை கோரவில்லை. சுவிஸ் வங்கி துறை தீர்ப்பாயத்தில் உள்ள தகவல்களின்படி கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர், டேராடூனை சேர்ந்தவர் ஒருவர், மும்பையை சேர்ந்த 2 பேர் மற்றும் பிரான்ஸ், இங்கிலாந்தில் குடியேறிய இந்தியர்களின் வங்கி கணக்குகள் தான் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதில், பணத்தை உரிமைகோர 2 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு வருகிற 15-ந் தேதியுடன் முடிகிறது. 3 பேருக்கான கெடு அடுத்த மாதம் முடிவடைகிறது. மீதம் உள்ள இந்தியர்கள் அடுத்த வருடம் டிசம்பர் வரை பணத்தை திரும்ப பெற உரிமை கோர வாய்ப்பு உள்ளது.

பணத்துக்கு உரிமை கோருபவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள், அதற்கான ஆவணங்களை சுவிஸ் வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், பணத்தை உரிமை கோரும் உரிமை அந்த வாடிக்கையாளர்களுக்கு கிடையாது என்று சுவிஸ் வங்கித்துறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இந்த பணத்துக்கு உரிமை கோரினால் கருப்பு பண விவகாரத்தில் சிக்க வேண்டியது இருக்கும். எனவே, இந்தியர்கள் யாரும் இந்த பணத்துக்கு உரிமை கோர முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் 320 கோடி ரூபாயை அந்த நாடே எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.

எனவே இந்த கணக்குகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டு வர முடியாது. சுவிஸ் வங்கியில் மேலும் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

Tags:    

Similar News