செய்திகள்
டாஸ்மாக் கடை

தமிழகத்தில் 4 நாட்களில் ரூ.800 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-04-30 05:50 GMT   |   Update On 2021-04-30 05:50 GMT
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் கொண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ள கட்சியினர் பணத்தை பொருட்படுத்தாமல் இன்றே மதுபானங்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதில் தீவிரமாக உள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படுகிறது.

மேலும் மற்ற நாட்களில் இரவு 9 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தொற்று தீவிரம் அடைந்ததால் பார்களும் மூடப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளின் காரணமாக டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விற்பனை குறைந்தாலும் சனிக்கிழமைகளில் அதனை ஈடு செய்யும் வகையில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

மதுப்பிரியர்கள் மதுபானங்களை அதிக அளவு வாங்கி இருப்பு வைப்பதால் விற்பனை கூடியுள்ளது. எத்தனை பாட்டில்கள் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் விற்பனை செய்து வருகிறார்கள்.

நாளை (மே 1-ந்தேதி) மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 2-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படுகிறது. தேர்தல் முடிவுகள் தெரிய இருப்பதால் அதனை கொண்டாடுவதற்காக மதுப்பிரியர்கள் மொத்தமாக மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மேலும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக மது விற்பனை அதிகமாக இருக்கும். வார இறுதி நாளோடு தேர்தல் முடிவு மற்றும் மே தின விடுமுறை ஆகியவை இணைந்து வருவதால் இன்று மதியம் முதல் மது விற்பனை அமோகமாக இருந்தது.

பகல் 12 மணியில் இருந்தே கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி குவித்தனர்.

வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் சராசரியாக தினமும் ரூ.120 முதல் ரூ.130 கோடி வரை விற்பனை நடைபெறும். வியாழன், வெள்ளி கிழமைகளில் ரூ.500 கோடிக்கு மது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்றுவரை ரூ.800 கோடிக்கு அதிகமாக மதுவிற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அனைத்து மதுக்கடைகளிலும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மதுவிற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால் இன்று மாலையில் இருந்து மது விற்பனை அதிகரிக்கும். கடைகளில் நெரிசல் இல்லாமல் வாங்கி செல்வதற்கு வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு 9 மணி வரை மது விற்பனை நடைபெறுவதால் அதற்குள்ளாக மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.



தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் பீர் பாட்டில்கள் பெட்டி பெட்டியாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானங்களை வாங்கி வீடுகளில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தொழிலாக செய்கின்றனர். அவர்களுக்கும் இது ஒரு ஜாக்பாட்டாகும்.

ஒரு பாட்டிலுக்கு ரூ.100 வரை கூடுதலாக வைத்து நாளை முதல் விற்பார்கள். சென்னையில் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் கொண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ள கட்சியினர் பணத்தை பொருட்படுத்தாமல் இன்றே மது பானங்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதில் தீவிரமாக உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News