செய்திகள்
கோப்புபடம்

வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 250 பேர் மீது வழக்கு

Published On 2021-10-08 08:41 GMT   |   Update On 2021-10-08 08:41 GMT
ஆலங்குளம் அருகே வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் நாரணாபுரம் பஞ்சாயத்தில் நேற்று முன்தினம் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்த பஞ்சாயத்தின் கீழ் ஆ.மருதப்பபுரம், நாரணாபுரம் ஆகிய ஊர்கள் அடங்கும். ஊராட்சி தலைவர் பதவிக்கு நாரணாபுரம் கிராமத்தில் சண்முகத்தாய் என்பவரும், மருதப்பபுரம் கிராமத்தில் செல்வி என்பவரும் போட்டியிட்டனர்.

இரு கிராம மக்களும் தங்கள் கிராமத்தை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் தினத்தன்று மாலை 6 மணிக்கு பின்பு நாரணாபுரம் கிராமத்திற்கு வந்த வேட்பாளர் செல்வியின் கணவர் மணிமாறன் காரை பாறாங்கல் கொண்டு மர்ம நபர்கள் தாக்கினர். இதையடுத்து மருதப்பபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அந்த ஊருக்கு வந்த நாரணாபுரத்தை சேர்ந்த 6 பூத் ஏஜெண்டுகளையும், பதிலுக்கு நாரணாபுரம் பொதுமக்கள் மருதப்பபுரம் ஊரை சேர்ந்த மூன்று பூத் ஏஜெண்டுகளையும் சேர்த்து வாக்குச்சாவடி ஊழியர்களை சிறைபிடித்தனர்.

தகவல் அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் போலீஸ் உயரதிகாரிகள் அதிரடி படை உதவியுடன் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பெட்டிகளை மீட்டனர். மேலும் உரிய விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.

சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வாக்குப்பெட்டியை எடுக்கவிடாமல் தடுத்ததாக தேர்தல் அலுவலர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் 250 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு கிராமங்களிலும் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News