செய்திகள்
பிரதமர் மோடி

6 ஆண்டுகள் நிறைவு: ஜன்தன் திட்டத்துக்கு பிரதமர் மோடி புகழாரம்

Published On 2020-08-29 02:44 GMT   |   Update On 2020-08-29 02:44 GMT
ஏராளமான மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றிய ஜன்தன் யோஜனா திட்டத்துக்கு நன்றி எனக்கூறியுள்ள பிரதமர், இதில் பயன்பெறும் பெரும்பகுதி மக்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களும், பெண்களும் ஆவர் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
புதுடெல்லி :

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு முதல் முறையாக கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அமல்படுத்திய திட்டங்களில் முக்கியமானது ‘ஜன்தன் யோஜனா’ திட்டம். வங்கி கணக்கு இல்லாத ஏழைகளுக்கு வங்கி கணக்கு உருவாக்கும் இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கினர். இந்த கணக்குகள் வழியாக அரசின் மானியங்கள் நேரடியாக செலுத்தப்பட்டன.

இந்த திட்டம் அமல்படுத்தி நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘வங்கி கணக்கு இல்லாதவர்களும் வங்கி சேவையை பயன்படுத்தும் நோக்கில், 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. ஆட்டத்தையே மாற்றும் திறனுடைய இந்த திட்டம், ஏராளமான வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அடித்தளமாக இயங்கி வருகிறது.

கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஏராளமான மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றிய ஜன்தன் யோஜனா திட்டத்துக்கு நன்றி எனக்கூறியுள்ள பிரதமர், இதில் பயன்பெறும் பெரும்பகுதி மக்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களும், பெண்களும் ஆவர் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். இந்த திட்டத்துக்காக உழைத்தவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News