ஆன்மிகம்
இயேசு

உன்னதமானவர் தரும் பாதுகாப்பு

Published On 2019-12-28 03:49 GMT   |   Update On 2019-12-28 03:49 GMT
சர்வ வல்லமையுள்ள உன்னதமான இயேசுவை தமது ஜீவனாக தேடுகிறவர்களுக்கும், முழு இருதயத்தோடு தேவசமூகத்தில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் இறைவன் கொடுக்கும் பாதுகாப்பு வித்தியாசமானது.
உலகத்தில் இன்று அநேக பாதுகாப்பு மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு பெற்றோரின் பாதுகாப்பு. மனிதர்களுக்கு காவல்துறையால் பாதுகாப்பு. நமது நாட்டிற்கு ராணுவத்தால் பாதுகாப்பு.

ஆனால் சர்வ வல்லமையுள்ள உன்னதமான இயேசுவை தமது ஜீவனாக தேடுகிறவர்களுக்கும், முழு இருதயத்தோடு தேவசமூகத்தில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் இறைவன் கொடுக்கும் பாதுகாப்பு வித்தியாசமானது.

‘ஆண்டவர், உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்” (ஏசா.6:1).

ஏசாயா தீர்க்கதரிசி மேற்கண்ட வசனத்தின் தரிசனத்தை கண்டார். தேவன் பரலோகத்தில் உன்னதங்களில் இருக்கிறார். நாம் பார்க்கிற நட்சத்திரங்களின் உயரம் எவ்வளவு உயரமாயிருக்கிறது. அதைவிட உயரத்தில் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். உன்னதத்தில் இருந்துகொண்டு தமது அக்னி ஜுவாலை போன்ற கண்களால் உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் பார்க்கிறார். நாம் அவரை காண முடியாது, அவர் நம்மை காண்பார்.

‘கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்” (ஏசா.33:5).

நம்மை பாதுகாக்கிற சர்வலோக தேவன் பரலோக உன்னதத்தில் வாசமாயிருக்கிறார். அவர் உறங்குவதில்லை. உன்னதமானவர், நமக்கு அடைக்கலமானவர். ஆபத்துக் காலத்தில் நமக்கு பாதுகாவலராக இருக்கிறார். கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். உன் வழிகளிலெல்லாம் உன்னை காக்கும்படி தமது தூதர்களுக்கு கட்டளையிடுவார்.

தேவ கட்டளை

‘உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்னியை உனக்குக் காண்பித்தார். அக்னியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்’ (உபா.4:36).

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்தார்கள். கர்த்தர் மோசேயை அழைத்து இஸ்ரவேல் ஜனங்கள் 3 நாட்கள் தங்களை பரிசுத்தப்படுத்தி 3-வது நாளின் விடியற்காலையில் 3 மணிக்கு இடி முழக்கங்களும், மின்னல்களும், எக்காள சத்தங்களும் கேட்கும்போது சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்து நிற்கவேண்டும். சீனாய் மலையை யார் தொட்டாலும் இறந்து போவார்கள் என்று எச்சரிக்கப்பட்டது.

விடியற்காலையில் கர்த்தர் சீனாய் மலையின் மேல் அக்னியில் இறங்கினார். மலை முழுவதும் மிகவும் அதிர்ந்து அசைந்தது. மலையிலிருந்து வானளவு அக்னி எரிந்துகொண்டிருந்தது.

அக்னியின் நடுவிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தோடு பேசினார். அவர் சத்தத்தை கேட்டார்கள். அவர் ரூபத்தை யாரும் பார்க்கவில்லை. அக்னியிலிருந்து பேசி 10 கட்டளைகளை கொடுத்தார். 10 கட்டளைக்கு கீழ்படிந்து யார் வாழ்ந்தாலும் அவர் கரத்தின் மறைவில் உன்னை பாதுகாப்பார்.

தேவ வசனம்

‘நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது’ (யோவா. 6:63).

பிதாவின் வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது. பிதாவின் வார்த்தை மண் குகையில் ஏழு தரம் உருக்கி புடமிட்ட சுத்தமான வார்த்தை. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் மேலான வல்லமையான வார்த்தை. தேனிலும், தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமான வார்த்தை.

தாவீது சொன்னார், ‘உமது வார்த்தைகள் என் நாவிற்கு இன்பமும், என் வாய்க்கு தேனிலும் மதுரமானது’ என்றார்.

தேவ வார்த்தைகள் பரிசுத்தத்திலும், அதிகாரத்திலும், வல்லமையிலும் உயர்ந்த வார்த்தைகள். ‘என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்’ என்றார். உலக வேஷம் தரித்து தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனால் நமது ஜெபத்திற்கு பதிலும் இல்லை, உங்களை திரும்பியும் பார்க்கமாட்டார்.

உள்ளங்கையில் வைத்து பாதுகாக்கிறார்

‘இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்’ (ஏசா.49:16).

ஸ்திரீயானவள் தன் பாலகனை மறப்பாளோ?, அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்றார். ஒரு தாய் தனது குழந்தையின் மேல் காட்டும் அன்பை விட தேவனின் அன்பு மேலானது. அவர் அன்புடனும் கருணையுடனும் நம்மை பாதுகாப்பார்.

நம்மை மறக்காதிருக்க அவரது உள்ளங்கையில் வரைந்து வைத்திருப்பதே அவரது மேலான அன்பு. நமது கண்முன் நிற்கும் அவரது கையிலுள்ள தழும்புகளால் நமது வியாதிகளை குணமாக்கி பாதுகாக்கிறார். ஆமென்.

ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50.
Tags:    

Similar News