செய்திகள்
காசிமேடு மீன் மார்க்கெட்

காசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வு

Published On 2021-07-17 08:34 GMT   |   Update On 2021-07-17 08:34 GMT
வழக்கமாக காசிமேடு பகுதியில் இருந்து கடலுக்கு சென்றால் அனைத்து வகை மீன்களும் தாராளமாக கிடைக்கும்.
ராயபுரம்:

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும் 1,800-க்கும் அதிகமான பைபர் படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.

தடை காலம் முடிந்து மீனவர்கள் அதிகளவில் கடலுக்கு செல்லவில்லை. தற்போது டீசல் விலை அதிகமாகி இருப்பதால் கடலுக்கு சென்று வருவதற்கு ஏற்படும் செலவைவிட மீன்கள் குறைவாகவே கிடைக்கின்றன.

இதனால் 30 சதவீத மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். தற்போது பெரிய வகை மீன்கள் அதிகளவில் கிடைக்கவில்லை. சிறிய மீன்களே கிடைக்கின்றன.

வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன் சந்தையில் கொடிகட்டி பறக்கும் மீன் வியாபாரம் இன்று மந்தமாகவே இருந்தது.
மீன் வாங்க வந்த பொதுமக்கள் பெரிய மீன்கள் கிடைக்காததாலும், மீன்களின் விலை அதிகமாக இருந்ததாலும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பலர் மீன் வாங்காமலேயே வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.

வழக்கமாக வஞ்சிரம், வவ்வால், பாறை, கடம்பா போன்ற பெரிய ரக மீன்கள் ஏராளமாக வரும். ஆனால் இன்று சிறிய வகை மீன்களான சங்கரா, தும்பிலி, நெத்திலி, கவலை போன்ற மீன்கள்தான் ஓரளவு வந்திருந்தன. பெரிய மீன்கள் கிடைக்கவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

வஞ்சிரம் மீன் வழக்கமாக கிலோ ரூ.800 வரை இருக்கும் இன்று ஒரு கிலோ ரூ.1,200-க்கும் விற்கப்பட்டது. கிலோ ரூ.700-க்கும் விற்கப்படும் வவ்வால் இன்று ரூ.900-க்கும், பாறை ரூ.600-க்கு பதிலாக ரூ.900-க்கும் விற்கப்பட்டது.

சிறிய மீன்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இறால் கிலோ ரூ-350-க்கு பதிலாக ரூ.450-க்கும், சங்கரா உள்ளிட்ட மற்ற மீன்களும் வழக்கமான விலையை விட ரூ.100 முதல் ரூ.150 வரை அதிக விலைக்கும் விற்கப்பட்டன.

மீன் விலை உயர்வு குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-

வழக்கமாக காசிமேடு பகுதியில் இருந்து கடலுக்கு சென்றால் அனைத்து வகை மீன்களும் தாராளமாக கிடைக்கும். தற்போது மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்றால் எதிர்பார்த்த அளவு பெரிய மீன்கள் கிடைக்கவில்லை.

மீன் பிடிக்க கடலுக்கு சென்றால் 7 நாள் முதல் 15 நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து வருவோம். தற்போது டீசல் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டது. மீன்பிடிக்கும் ஆட்கள், உணவு ஆகிய செலவை ஒப்பிடும் போது ஒரு விசை படகுக்கு சுமார் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் தற்போது டீசல் விலை உள்ளிட்ட செலவு அதிகரித்து விட்டது. பெரிய வகை மீன்களும் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிறிய மீன்களை மட்டுமே பிடித்து வருகிறோம். எனவே பெரும்பாலானோர் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் வரத்து பெருமளவு குறைந்துவிட்டது. சென்றுவரும் செலவுக்கு ஏற்ப மீன் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு சலுகை விலையில் டீசல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags:    

Similar News