செய்திகள்
வாலிபர் மரணம்

வளசரவாக்கத்தில் பொதுமக்கள் திருடன் என்று நினைத்து தாக்கியதில் வாலிபர் பலி

Published On 2019-07-09 08:45 GMT   |   Update On 2019-07-09 08:45 GMT
வளசரவாக்கத்தில் பொதுமக்கள் திருடன் என்று நினைத்து தாக்கியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வளசரவாக்கம் ஆற்காடு சாலை மின்சார சுடுகாடு அருகே கடந்த 4-ந்தேதி இரவு “திருடன் திருடன்” என்று குரல் ஒலித்தது.

அப்போது ஓடிய வாலிபர் ஒருவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் காதில் ரத்தம் வழிந்து படுகாயங்களுடன் மயங்கினார்.

மதுரவாயல் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் அருண் (வயது20) என்பது தெரிந்தது. அவர் போரூர் அருகே நண்பர் ஒருவருடன் தங்கி இருந்து பருப்பு வியாபாரம் செய்து உள்ளார்.

இதற்கிடையே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அருணை அவரது சகோதரர் அஜித் மற்றும் தாய் லைலா ஆகியோர் வேலூர் அழைத்து சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 6-ந் தேதி வீடு திரும்பிய அருண் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்

இந்த நிலையில் அருணின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் அஜித் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பவம் நடந்த 4-ந் தேதி அருண் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு கடையில் மது குடித்து உள்ளார். அவருடன் வந்த நபர் யார்? இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் திருடன் திருடன் என்று கூச்சலிட்டாரா, என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News