செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு

Published On 2021-01-08 02:09 GMT   |   Update On 2021-01-08 02:09 GMT
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக பூண்டி ஏரிக்கு மழை நீருடன் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி ஏரிக்கு 2 ஆயிரத்து 997 கன அடியும், புழல் ஏரிக்கு 312, கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்திற்கு 75, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி ஏரியில் இருந்து நீர்வரத்துக்கு ஏற்ப 3 ஆயிரம் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 312 கனஅடி வீதமும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு வழியாக கடலில் கடக்கிறது. இதனால் அடையாறு ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் இதனை வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன் புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்கிறது. தொடர்ந்து ஏரிகளின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 5 ஆயிரத்து 807 மில்லியன் கன அடி (5.8 டி.எம்.சி.) இருப்பு இருந்து உள்ளது.

மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News