செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 3 வாரம் விடுமுறை: எடியூரப்பா

Published On 2020-10-12 02:17 GMT   |   Update On 2020-10-12 02:17 GMT
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு நாளை (இன்று) முதல் வருகிற 30-ந் தேதி வரை 3 வாரம் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை அரசு திறக்கவில்லை. ஆனாலும் அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை பள்ளிக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் வித்யாகாம திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கல்வியும் கற்று கொடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் ஆசிரியர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே வழக்கமாக அக்டோபர் மாதம் 3-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் அக்டோபர் மாத விடுமுறை அரசு ரத்து செய்து இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை கொடுக்க அரசு முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தற்போதைக்கு பள்ளிகளை திறப்பது இல்லை என்றும், வித்யாகாம திட்டத்தில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை நிறுத்தி வைப்பது என்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தேன்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு நாளை (இன்று) முதல் வருகிற 30-ந் தேதி வரை 3 வாரம் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான உத்தரவை பிறப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

எனது அன்புக்குரிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தசரா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News