செய்திகள்
கற்களை வீசி தாக்கப்பட்ட கார்

அரியானா துணை சபாநாயகரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய விவசாயிகள்

Published On 2021-07-12 10:08 GMT   |   Update On 2021-07-12 10:08 GMT
பாஜக தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
சண்டிகர்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 6 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களில் இருந்தும் சிலர் பங்கேற்றுள்ளனர். 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் மூலமாக விவசாயிகளுக்கு எவ்விதமான பலன்களும் இல்லை, இதன்மூலம் முற்றிலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களே பயன்பெற முடியும் என்று விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், விவசாயிகளின் கோபம் பாஜக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் திரும்பி உள்ளது. 

பாஜக ஆளும் அரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள், கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக மற்றும் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி தலைவர்களின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நடத்த அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது.

பாஜக தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

நேற்று பாஜக தலைவர்களின் நிகழ்ச்சிகளை குறிவைத்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சிர்சா மாவட்டத்தில் துணை சபாநாயகர் ரன்பீர் காங்வா சென்ற கார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால் காரில் இருந்த துணை சபாநாயகருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர். கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல் பதேகாபாத் மாவட்டத்தில் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் பன்வாரி லால், ஒரு கூட்டத்தில் பங்கேற்றபோது விவசாயிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஜஜ்ஜார் பகுதியில் அரவிந்த் சர்மா எம்பி, பகுதி பொறுப்ளர் வினோத் தாவ்டே, ஓம் பிரகாஷ் தங்கார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை குறிவைத்தும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் போலீஸ்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News