லைஃப்ஸ்டைல்
குடும்ப சொத்துக்களுக்கான பாகப்பிரிவினை

குடும்ப சொத்துக்களுக்கான பாகப்பிரிவினை

Published On 2021-04-03 03:27 GMT   |   Update On 2021-04-03 03:27 GMT
பாகப்பிரிவினை செய்யும்போது சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த மத ரீதியான சட்டம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு பாகப்பிரிவினையை செய்து கொள்ள சட்டம் தக்க வழிவகைகளை செய்துள்ளது.
அசையா சொத்துக்களான வீடு, மனை மற்றும் நிலம் ஆகியவற்றை பாகப்பிரிவினை செய்யும்போது, குடும்ப அங்கத்தினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகின்றன. உறவு மற்றும் உணர்வு ரீதியான சிக்கல்களை உருவாக்கும் இந்த பிரச்சினை பற்றி ரியல் எஸ்டேட் சொத்து ஆலோசகர்கள் அளிக்கும் முக்கியமான தகவல்கள் பற்றி இங்கே காணலாம்.

கூட்டுக் குடும்பச் சொத்து, குடும்ப வியாபாரம், விவசாய பூமி, தோட்டம், காடு போன்ற சொத்துகளை குடும்பத் தலைவரை மையமாக வைத்து பரம்பரை சந்ததிகள் அனுபவித்து வரும் நிலையில், கால நிலைக்கேற்ப குடும்ப நலன், குடும்ப அங்கத்தினர்களுக்குள் சுமுக உறவு தொடர பாகப்பிரிவினை ஏற்படுத்தப்படுகிறது. பாகப்பிரிவினை செய்ய வேண்டிய வீடு அல்லது நிலம் கிழக்கு, மேற்கு திசை பார்த்ததாக இருந்தால் கிழக்கு பகுதி தம்பிக்கும், மேற்கு பகுதி அண்ணனுக்கும் அளிக்க வேண்டும். வடக்கு, தெற்கு திசை பார்த்ததாக இருந்தால் வடக்கு பகுதி தம்பிக்கும், தெற்கு பகுதி அண்ணனுக்கும் பிரித்து அளிக்கப்படுவது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதாகும். மேலும், பாகப்பிரிவினை சமயத்தில் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு கிரவுண்டு (40 x 60) அளவுள்ள இடத்தை அண்ணன், தம்பி இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யும்போது வீட்டின் முன்பகுதியில் 40 அடி அகலம் அமைந்திருந்தால், அதை 20 x 60 என்ற அளவில் கிழக்கு, மேற்கு பகுதிகளை விதிமுறைப்படி பிரித்துக்கொள்ளலாம். அகலம் குறுகலாக இருந்தால் பின் பக்கம், முன் பக்கம் என்று பிரித்து, பின் பக்க இடம் கிடைப்பவருக்கு நடைபாதை ஒதுக்கீடு செய்து, அதை அவருக்கு கொடுக்க வேண்டும். இடம் மூன்றாக பிரிக்கப்படும் நிலையில் பொதுப்பாதை விட்டு பிரிக்க வேண்டும். பின் பக்க இடம் வருபவர்களுக்கு வாகனம் செல்ல, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் செல்ல இந்த பாதையை பயன்படுத்த வேண்டும்.

தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என்ற அடுக்கு மாடி வீடுகளில் பிரிவினை செய்யும்போது, குடும்பத்தில் மூத்தவர் இரண்டாம் தளத்தையும், இரண்டாமவர் முதல் தளத்தையும், இளையவர் தரைத் தளத்தையும் பிரித்துக்கொள்ளலாம். நிலம் அல்லது வீடுகள் மூன்று இருந்து, வாரிசுகளும் மூவர் இருந்தால், யாருக்கு எந்த இடம், வீடு என்பதை முன்னதாகவே பிரிவினை செய்து வைத்து விடுவது நல்லது. இல்லாவிட்டால், பெற்றோர்களின் காலத்துக்குப் பிறகு, அரசு பதிவு பெற்ற மதிப்பாளரை அணுகி, சொத்தின் சந்தை மதிப்பை அறிந்து பிரிக்க வேண்டிய சிக்கல் ஏற்படக்கூடும்.

சில உணர்வுப்பூர்வமான பாகப்பிரிவினை சூழலில் வாரிசுகளில் ஒருவர் படிக்காதவராகவும், மற்றவர் படித்தவராகவும் இருப்பது, ஒருவர் மட்டும் வேலையின்றி இருப்பது, மற்றவர் வேலையிலும் இருப்பது போன்ற சூழலில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகிவை இல்லாதவருக்குச் சற்று கூடுதலாக பாகப்பிரிவினை செய்வது நடைமுறையில் உள்ளது. மனை அல்லது நிலத்தில் தெற்கு பாகத்தைப் பெற வேண்டியவர் வடக்கு பாகத்தைத் தரும்படி கேட்கும் நிலையில் அனைவரது ஒப்புதலோடு சட்டமும் அதை ஏற்றுக்கொள்கிறது. பாகப்பிரிவினை செய்யும்போது சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த மத ரீதியான சட்டம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு பாகப்பிரிவினையை செய்து கொள்ள சட்டம் தக்க வழிவகைகளை செய்துள்ளது.

ஒரு கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த மகன்கள் மற்றும் மகள்கள் அனைவரும் தங்களுக்குள் விட்டுக்கொடுத்து செய்யப்படும் கூட்டுக்குடும்ப ஏற்பாடு (Joint Family Arrangement) என்ற நிலையில் சொத்தை அபிவிருத்தி செய்து, கிடைக்கும் வருவாயில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள முயல வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அனைவருக்கும் கிடைக்கும் பொதுவான நன்மைகளுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாகி விடக்கூடும் என்று சொத்து முதலீட்டு ஆலோசகர்கள் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.
Tags:    

Similar News