செய்திகள்
போலீஸ் ஏட்டு தணிகைவேல்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி

Published On 2021-01-12 02:32 GMT   |   Update On 2021-01-12 02:32 GMT
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம், சட்ராஸ் போலீஸ் நிலைத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் தணிகைவேல் (வயது 43). இவர் மாமல்லபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனது பணி முடிந்து சட்ராஸ் போலீஸ் நிலையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கிழக்குகடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது, புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில், சாலையில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மாமல்லபுரம் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி ஏட்டு தணிகைவேல் பரிதாபமாக இறந்தார். மேலும் அவர் மீது மோதிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தணிகைவேலுக்கு சந்திரகலா என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
Tags:    

Similar News