செய்திகள்
உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஊழியர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.79¾ லட்சம் உண்டியல் காணிக்கை

Published On 2021-07-30 04:57 GMT   |   Update On 2021-07-30 04:57 GMT
வழக்கமாக பவுர்ணமி முடிந்து ஒரு வாரத்திற்குள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்படி அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்களும் கிரிவலம் செல்கின்றனர்.

மேலும் கடந்த வாரம் பவுர்ணமியன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக பவுர்ணமி முடிந்து ஒரு வாரத்திற்குள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும்.

அதன்படி நேற்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் கோவிலில் உள்ள திருகல்யாண மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் உண்டியல் காணிக்கையாக 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி, ரூ.79 லட்சத்து 74 ஆயிரத்து 868 பெறப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி இக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

Tags:    

Similar News