செய்திகள்
கோப்பு படம்

வியாபாரியை கட்டி போட்டு ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டல் - 2 பேர் கைது

Published On 2019-11-06 12:23 GMT   |   Update On 2019-11-06 12:23 GMT
திண்டிவனம் அருகே வியாபாரியை கட்டி போட்டு ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

திண்டிவனம் நேரு வீதியில் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருபவர் மாலிக் பாஷா (வயது 44).

இவர், புதுவையை சேர்ந்த ஒருவருக்கு ரூ.3 லட்சம் கடன் கொடுத்து இருந்தார். அந்த கடன் தொகையை திருப்பி தருவதாக கூறி மாலிக் பாஷாவுக்கு அவர் போன் செய்து அழைத்தார்.

அதன்படி நேற்று காலை மாலிக்பாஷா திண்டிவனத்தில் இருந்து தனது காரில் புதுவை வந்தார்.

இந்திராகாந்தி சிலை அருகே அவருக்காக காத்து இருப்பதாக அந்த நபர் தகவல் கொடுத்து இருந்தார். இங்கு வந்து பார்த்த போது அவர் அங்கு இல்லை.

பின்னர் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, வில்லியனூர் ஆச்சாரியா கல்லூரி அருகே உள்ள செல்வா நகருக்கு வரும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே, மாலிக்பாஷா அங்கு சென்றார். அங்குள்ள வீட்டில் அந்த நபரும், மற்றும் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஒருவரும் இருந்தனர். வேறு யாரும் அந்த வீட்டில் இல்லை.

3 பேரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மாலிக் பாஷாவுக்கு அவருடைய மனைவி போன் செய்து பேசினார்.

அந்த நேரத்தில் திடீரென அவர்கள் 2 பேரும் மாலிக் பாஷாவின் போனை பறித்து ‘சுவிட்ச் ஆப்’ செய்தனர்.

பின்னர் மாலிக் பாஷாவை அடித்து உதைத்தார்கள். அடுத்து அவரது கை-கால்களை கட்டிப் போட்டனர்.

உனது மனைவியிடம் போன் செய்து ரூ.45 லட்சம் கொண்டு வரச்சொல். இல்லை என்றால் உயிரோடு விட மாட்டோம் என்று மிரட்டினார்கள்.

அதற்கு மாலிக்பாஷா என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறினார். இதனால் மீண்டும் அவரை தாக்கிய அவர்கள் ஒரு இருட்டு அறைக்குள் தள்ளி கதவை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர். அப்போது மாலிக் பாஷாவின் காரையும் எடுத்து சென்றனர்.

அறைக்குள் கிடந்த மாலிக் பாஷா தன் மீது கட்டப்பட்ட கயிறுகளை கஷ்டப்பட்டு அவிழ்த்தார். பின்னர் அறை கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு ஓடி வந்தார். வெளிக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே இருந்தபடி கூச்சல் போட்டார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கதவின் பூட்டை உடைத்து மாலிக் பாஷாவை மீட்டார்கள்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, எங்களுக்குதான் மாலிக் பாஷா கடன் தரவேண்டி உள்ளது. அந்த பணத்தை தர மறுத்ததால் வீட்டுக்குள் கட்டிப்போட்டோம் என்று கூறினார்கள்.

எனவே, கடன் கொடுத்தது யார்? என்பதில் குழப்பம் நிலவுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News