செய்திகள்
சித்தராமையா

கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் பள்ளிகளை திறக்கக்கூடாது: சித்தராமையா

Published On 2020-10-10 01:51 GMT   |   Update On 2020-10-10 01:51 GMT
கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் பள்ளிகளை திறக்கக்கூடாது என்று கூறி மந்திரி சுரேஷ்குமாருக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாருக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை வழங்குமாறு நீங்கள் (சுரேஷ்குமார்) கேட்டுள்ளீர்கள். மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது நமக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. முன்பு பல்வேறு வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டதை நானே ஆதரித்தேன். ஆனால் இன்று நிலைமை மிக மோசமாக உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை அரசு திரித்து கூறி தனது முதுகை தானே தட்டிக் கொள்கிறது. அரசை மக்கள் பாராட்ட வேண்டும். தன்னைத்தானே பாராட்டிக்கொள்வது நகைப்புக்குரியதாக உள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு 20 வயதுக்கு உட்பட்ட 61 பேர் பலியாகியுள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை அரசு பெரிய அளவில் மூடிமறைக்கிறது. பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 99 பேர் பலியாகியுள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் எனக்கு கிடைத்துள்ள தகவல்படி, தொட்டப்பள்ளாபுராவில் மட்டுமே 99 பேர் பலியாகியுள்ளனர்.

ஒசக்கோட்டையில் 80 பேர், நெலமங்களாவில் 40 பேர், தேவனஹள்ளியில் 50 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் தாலுகா சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்டு பேசுங்கள். இது தவிர கொரோனா அறிகுறி ஏற்பட்டாலும், மக்கள் பயந்து ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீடுகளிலேயே மரணம் அடைந்துள்ளனர். இவ்வாறு எத்தனை பேர் இறந்தனர் என்பது தெரியவில்லை.

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை 16 ஆயிரத்து 670 பேர் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்து உள்ளனர். நடப்பு ஆண்டில் அதே காலக்கட்டத்தில் நகரில் 24 ஆயிரத்து 527 பேர் மரணம் அடைந்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஊரடங்கால் மக்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் விபத்துகளால் ஏற்படும் இறப்பும் குறைந்துவிட்டது. ஆயினும், இந்த 3 மாதங்களில் இவ்வளவு இறப்பு பதிவாகி இருப்பது ஏன்?. அதனால் இந்த மரணங்கள் கொரோனாவால் நிகழ்ந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அரசு கொரோனாவுக்கு 3 பேர் இறந்தால் ஒருவரை மட்டுமே கணக்கு காட்டுகிறது.

தேசிய அளவில் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை இவ்வாறு திரித்து காட்டுவது, மன்னிக்க முடியாத குற்றம். இந்த விவரங்கள் உங்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் வந்துள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் பள்ளிகளை திறந்தால், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட விதிமுறைகள் குழந்தைகள் பின்பற்றுமா?. படித்தவர்களே இதை சரியாக பின்பற்றாத நிலையில், குழந்தைகளிடம் இதை எதிர்பார்க்க முடியுமா?.

ஒருவேளை பள்ளிகளை திறந்தால் சுனாமி போல் கொரோனா மரணங்கள் நிகழும். அதை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அரசு தள்ளப்படும். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் சில நாடுகள் பள்ளிகளை திறந்து, பிரச்சினையை தன் மீது இழுத்து போட்டுக்கொண்டன என்பது நமது கண் முன் உள்ளது.

இந்த எல்லா விஷயங்களையும் மனதில் நிறுத்தி, கர்நாடகத்தில் எக்காரணம் கொண்டும் பள்ளிகளை திறக்கக்கூடாது. நகரங்களில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. அதே போல் மாநிலத்தின் பிறகு பகுதிகளில் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி கிடைக்க தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து குழந்தைகளையும் தேர்ச்சி பெற செய்து, அடுத்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும். கொரோனா பரவல் குறைந்த பிறகு ஆலோசனை நடத்தி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு அதில் சித்தராமையா கூறியுள்ளார்.
Tags:    

Similar News