செய்திகள்
கே.எல். ராகுல்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா அபார வெற்றி: தொடரை கைப்பற்றியது

Published On 2021-11-19 17:31 GMT   |   Update On 2021-11-19 17:31 GMT
இந்திய தொடக்க ஜோடி 13.2 ஓவரில் 117 ரன்கள் குவிக்க, 154 இலக்கை எளிதாக எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 21 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 28 பந்தில் 31 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அறிமுக வீரர் ஹர்சல் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சேஸிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 117 ரன்கள் குவித்தது. கேல்.எல். ராகல் 46 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 36 பந்தில் 1 பவுண்டரி, 5 சிக்சருடன் 55 ரன்கள் அடித்து வெளியேறினார். அப்போது இந்தியா 15.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யருடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அவர் வந்த வேகத்தில் 2 பந்தில் 1 ரன் எடுத்து சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார்.



4-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யர் உடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 18-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும்  ரிஷாப் பண்ட் இமாலய சிக்ஸ்ருக்கு தூக்க, இந்தியா 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலையில் உள்ளது. ரிஷாப் பண்ட் 6 பந்தில் 12 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 11 பந்தில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Tags:    

Similar News