உள்ளூர் செய்திகள்
.

ஓசூரில் எலுமிச்சை பழம் விலை 5 மடங்கு உயர்வு ஒரு பழம் ரூ.12-க்கு விற்பனை

Published On 2022-04-15 07:41 GMT   |   Update On 2022-04-15 07:41 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எலுமிச்சம் பழம் ஒன்று ரூ.12&க்கு விற்பனையானது.
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஓசூரில் உள்ள உழவர் சந்தை மற்றும் இதர காய்கறி சந்தைகளில் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது.

இது குறித்து ஓசூர் காமராஜ் காலனி உழவர் சந்தை சாலையை சேர்ந்த  எலுமிச்சை பழ வியாபாரிகள் கூறியதாவது:&

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலேயே எலுமிச்சை பயிரிடப்படுகிறது. இதனால் ஓசூர் சந்தையில் கோடை காலத்தில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆந்திர மாநிலம்  நெல்லூர், கூடுர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழத்தை வாங்கி வந்து ஓசூரில் விற்பனை செய்கிறோம். இம்முறையில் ஓசூரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் எலுமிச்சை பழம் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வரை ரூ.2க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பெரிய எலுமிச்சை பழம் தற்போது ரூ.10 முதல் 12 வரையும், சிறிய எலுமிச்சை பழம் ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருப்பினும் கோடை வெயிலில் உடல் வெப்பம் தணிக்கும் மருத்துவ குணமுள்ள எலுமிச்சை பழத்தை வாங்கிச் செல்வதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளதால், விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. கோடை காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு தொடரும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்.
Tags:    

Similar News