செய்திகள்
கோப்புபடம்

மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி - அரசின் உத்தரவால் சாய ஆலை உரிமையாளர்கள் மகிழ்ச்சி

Published On 2021-10-16 09:23 GMT   |   Update On 2021-10-16 09:23 GMT
மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய சுற்றறிக்கைப்படி சாய ஆலைகளுக்கு 5 ஆண்டுகள் இயக்க அனுமதி வழங்கவேண்டும் என தமிழக அரசிடம் சாய ஆலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
திருப்பூர்:

திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்து 400க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் உள்ளன. சிவப்பு நிற வகைப்பாட்டில் உள்ள இந்த ஆலைகள் ஆண்டுதோறும் மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் இயக்க அனுமதியை புதுப்பிக்க வேண்டியிருந்தது. தமிழக அரசின் புதிய உத்தரவால் சாய ஆலைகள் இனி 5 ஆண்டுகளுக்கு இயக்க அனுமதி பெற முடியும். 

இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 

திருப்பூரில் உள்ள சாய ஆலைகள் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கை கொடுக்கின்றன. ஆனாலும், மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சாய ஆலைகள் ஆண்டுதோறும் இயக்க அனுமதியை புதுப்பிக்க வேண்டிய நிலையே இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றறிக்கைப்படி சாய ஆலைகளுக்கு 5 ஆண்டுகள் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் சாய ஆலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது.

எங்கள் தொடர் கோரிக்கையை ஏற்று தகுதியான நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கான தொகையை மொத்தமாக செலுத்தி இயக்க அனுமதியை புதுப்பித்துக் கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சாய ஆலை துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 

பெரிய சுமை குறைந்துள்ளது. இதற்காக முதல்வர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர், செய்தித்துறை அமைச்சர்களுக்கு சாய ஆலை சங்கம் நன்றி தெரிவிக்கிறது. தொழில் துறையில் முன்னோடியாக திகழும் தமிழகத்தில் தொழில் மேலும் வளர்ச்சி பெற இது உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News