செய்திகள்
சிசிடிவி காட்சி

ஜார்க்கண்ட் நீதிபதி மரண வழக்கில் திருப்பம்- சிபிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்

Published On 2021-09-23 10:20 GMT   |   Update On 2021-09-23 11:28 GMT
ஜார்க்கண்ட் நீதிபதி மரணம் தொடர்பான வழக்கை தீவிரமாக விசாரித்த சிபிஐ, தனது விசாரணை தொடர்பான விவரங்களை இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் (வயது 49) கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி ஆட்டோ மோதி உயிரிழந்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், சாலையோரம் நடந்து சென்ற நீதிபதி மீது, ஆட்டோ மோதுவது தெரிந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் மற்றும் உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு மாபியா கொலை வழக்குகளை விசாரித்து வந்த  நீதிபதி ஆனந்த் திடீரென ஆட்டோ மோதி இறந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இது திட்டமிடப்பட்டு நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இந்த வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை தீவிரமாக விசாரித்த சிபிஐ, தனது விசாரணை தொடர்பான விவரங்களை இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. சிசிடிவி பதிவு மற்றும் தடயவியல் ஆதாரங்களை ஆய்வு செய்ததில், நீதிபதி மீது வேண்டுமென்றே ஆட்டோ டிரைவர், ஆட்டோவை மோதியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சிபிஐ விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. தடயவியல் அறிக்கைகளை மற்ற ஆதாரங்களுடன் இணைத்து அறிக்கையை தாக்கல் செய்து வழக்கை முடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News