தொழில்நுட்பச் செய்திகள்
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் அனுப்பி ஷாக் கொடுத்த நிறுவனம்

Published On 2021-12-28 11:33 GMT   |   Update On 2021-12-28 11:33 GMT
ஆப்பிள் வலைதளத்தில் புதிய ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் அனுப்பப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.


இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கேரோல் என்ற நபர் தனக்கு அதிகம் பிடித்த ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம் செலவிட்டு ஆன்லைனில் வாங்கினார். ஆன்லைன் ஷாப்பிங் முடித்து ஐபோனுக்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில் அவருக்கான கிடைத்தது. மிகுந்த ஆசையுடன் பார்சலை திறந்து பார்த்த டேனியல் அதனுள் டெய்ரி மில்க் சாக்லெட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதுமட்டுமின்றி சாக்லெட்களுடன் கைகளால் கசக்கப்பட்ட காகிதங்களும் வைக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தால் அதிக ஷாக் ஆன டேனியல், மற்ற ஆன்லைன் ஷாப்பர்களை போன்றே தான் ஏமாற்றப்பட்டதையும் டுவிட்டரில் ஆதங்கத்துடன் பதிவிட்டார். இத்துடன் தனக்கு அனுப்பப்பட்ட பார்சல் புகைப்படங்களையும் அவர் இணைத்து இருக்கிறார்.



"எனக்கு வரவேண்டிய ஐபோன் பார்செல் தாமதமாகி கொண்டே இருந்தது. மேலும் இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என ஐபோன் வினியோகம் பற்றிய தகவல்கள் பலமுறை மாற்றப்பட்டன. இதனால் நானே டெலிவரி செய்யும் கிடங்கிற்கு நேரடியாக சென்று ஐபோனை பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன். இதுபற்றி டெலிவரி நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து, பின் அங்கு சென்று எனது பார்செலை பெற்றுக் கொண்டேன்."

"பார்செலை திறந்து பார்த்ததும் அதில் சாக்லெட்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனேன். இதுபற்றி டெலிவரி செய்யும் நிறுவனத்திற்கு தகவல் அளித்தேன். எனது புகார் பற்றி விசாரணை செய்வதாக வாடிக்கையாளர் சேவை மைய மேலாளர் தெரிவித்தார்," என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டேனியல் தெரிவித்தார். 

இதுவரை டேனியலுக்கு ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் வினியோகம் செய்யப்படவில்லை. எனினும், டெலிவரி நிறுவனம் தொடர்ந்து டேனியலுடன் தொடர்பில் இருப்பதாகவும், சம்பவம் குறித்து விசாரணை செய்வதாகவும் தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News