செய்திகள்
சிறுமி ஓட்டி வந்த கார்.

திருப்பூரில் 13 வயது சிறுமி காரை ஓட்டியதால் விபத்து- பனியன் தொழிலாளி காயம்

Published On 2019-12-04 10:04 GMT   |   Update On 2019-12-04 10:04 GMT
திருப்பூரில் 13 வயது சிறுமி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பனியன் தொழிலாளி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

திருப்பூர்:

திருப்பூர் புதுராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் காந்திமணியன் (வயது 48). பனியன் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு வீட்டின் எதிரே உள்ள பனியன் நிறுவனத்தின் வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து காந்திமணியன் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

காந்தி மணியன் மீது மோதியதும் காரில் இருந்து 13 வயது சிறுமி ஒருவர் இறங்கினார். அப்போது தான் அந்த காரை சிறுமி ஓட்டி வந்தது தெரியவந்தது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த காந்திமணியின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக கூறினர்.

இதனால் போலீஸ் நிலையத்தில் விபத்து தொடர்பாக புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் சிறுமி ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்த மாநகர போலீஸ் துணைகமி‌ஷனர் பத்ரிநாராயணனிடம் கோட்டபோது அவர் கூறிதாவது:-

சிறியவர்கள் வாகனங்களை இயக்குவதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதும் சட்டப்படி குற்றமாகும். இவ்விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News