செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

டாஸ்மாக் தற்காலிக பணியாளர் ஓய்வு வயதை உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்

Published On 2020-09-16 01:45 GMT   |   Update On 2020-09-16 01:45 GMT
டாஸ்மாக் தற்காலிக பணியாளர்களின் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தலாம் என்றும் இது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் விஸ்வநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அரசாணை உடனுக்குடன் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அரசாணை அடிப்படையில் எங்களின் ஓய்வு வயதை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வக்கீல், “டாஸ்மாக்கில் நிரந்தர பணியாளர்கள் ஒரு பிரிவாகவும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மற்றொரு பிரிவாகவும் உள்ளனர். எனவே இந்த சலுகையை ஒப்பந்த ஊழியர்கள் கோர முடியாது. பணி விதிகளின்படி ஒப்பந்த பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்து நீக்கப்படலாம்” என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தமிழகத்தில் அரசுத்துறையில் நிரந்தர ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆகவும், நேரடியாக நியமிக்கப்பட்ட இரவுக்காவலர்கள், தூய்மைப்பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆகவும் உள்ளது. இதனால் டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒப்பந்த, தற்காலிக பணியாளர்கள் அதிகபட்ச வயது வரம்பை தேவைக்கு ஏற்ப 59-ஆக நீட்டிக்கலாம்.

இதை பணி விதிகள் மற்றும் அரசாணையை மீறியதாக கருத முடியாது. எனவே டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் பரிசீலிக்க வேண்டும்.

வயது வரம்பை உயர்த்துவதை, அந்த வயது வரை தங்களுக்கு கட்டாயம் பணி வழங்க வேண்டும் என்பதற்கான உரிமையாக கருத முடியாது. டாஸ்மாக்கில் 58 வயது முடிந்தவர்களுக்கு தேவைக்கு ஏற்ப 59 வயது வரை பணி நீட்டிப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News